பள்ளி வாகனத்தின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த 4ம் வகுப்பு மாணவன் பக்கவாட்டு மின்கம்பம் மோதி உயிரிழந்தான். இந்த துயர சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள மோடிநகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளி வேனில் அழைத்து வரப்பட்டு மீண்டும் வீட்டில் கொண்டு விடப்படுவது வழக்கம். இந்நிலையில் 4ம் வகுப்பு படிக்கும் 10 வயதான அனுராக் என்ற மாணவர் ஸ்கூல் வாகனத்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்டு காலையில் வீட்டில் இருந்து ஸ்கூலுக்கு சென்றுள்ளார். வாகனம் வேகமாக சென்றுகொண்டிருந்த போது அனுராக் தலையை வெளியே நீட்டியதாக கூறப்படுகிறது. அப்போது வாகனத்தின் பக்கவாட்டில் மிக நெருக்கமாக வந்த மின் கம்பம் மோதியதில் மாணவன் நிலைகுலைந்துள்ளான். உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வாகனத்தை இயக்கிய ஓட்டுநர், உதவியாளர், பள்ளி நிர்வாகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து தெரிவித்த அனுராக்கின் தாயார், ''குழந்தைகளை மிகவும் மெத்தனப்போக்குடனே பள்ளி நிர்வாகம் நடத்தியது. குறிப்பாக பள்ளி வாகனத்தில் அஜாக்ரதையுடனே இருந்தனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தோம். சமீபத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி பள்ளிக்குச் சென்று புகார் அளித்தோம். பள்ளி அதிகாரிகள், பழிவாங்கும் வகையில் என் பிள்ளையை சதி செய்து கொன்றுவிட்டதாக சந்தேகிக்கிறேன்” என்றார்.
மாணவன் இறந்தது குறித்து தெரிவித்த காவல்துறை, ''பள்ளி மாணவன் உயிரிழந்தது தொடர்பாக விசாரித்து வருகிறோம். பள்ளி முதல்வர், ஓட்டுநர் என அனைவரிடமும் விசாரணை நடக்கிறது. முன்னதாக மாணவனின் உறவினர்கள் பள்ளிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளோம். தடயவியல் மற்றும் தொழில்நுட்ப பரிசோதனைக்காக பேருந்தை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம்” என்றார்.
சமீபத்தில் சென்னையில் பள்ளி மாணவன் ஒருவன் பள்ளி வேன் மோதி உயிரிழந்தான். சென்னை ஆழ்வார்திருநகர் அருகே உள்ள பள்ளியில் நேற்று 2ஆம் வகுப்பு மாணவர் விபத்தில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக வேன் ஓட்டுநர் பூங்காவணம் மற்றும் உதவியாளர் ஞானசக்தி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்