ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் 8 மாத காலமாக 80க்கும் மேற்பட்ட ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.
கடந்த 2021 ஜூன் மாதம் கரோனா பெருந்தொற்று காலத்தின் போது சிறுமியின் தாய்க்கு ஸ்வர்ண குமாரி என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். சிறிது நாட்களிலேயே சிறுமியின் தாயார் கொரோனாவால் இறந்துவிட்டார். பின்னர் அந்தச் சிறுமியை ஸ்வர்ண குமாரி தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.
ஆகஸ்ட் 2021ல் சிறுமியின் தந்தை போலீஸில் தனது மகளைக் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். விசாரணையில் ஸ்வர்ண குமாரி தான் முதன்மைக் குற்றவாளி என்று அறிந்து கொண்டனர். கடந்த ஜனவரியில் ஸ்வர்ண குமாரியை போலீஸார் கைது செய்தனர். பின்னர் வழக்கை விசாரித்துவந்த குண்டூர் மேற்கு மண்டல காவல்துறையினர் மேலும் 10 பேரை கைது செய்தனர். அவர்களில் பிடெக் பயிலும் மாணவரும் உண்டு. பின்னர் அச்சிறுமியையும் மீட்டனர். சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதிர வைக்கும் கொடூரங்கள்..
கடந்த 8 மாதங்களாக அச்சிறுமியை பல்வேறு விபச்சார விடுதிகளுக்கு பாலியல் தொழில் கும்பல் அனுப்பியுள்ளது. ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா என பல மாநிலங்களுக்கும் சிறுமி அனுப்பப்பட்டுள்ளார். ஸ்வர்ண குமாரி தான் சிறுமியை முதன்முதலில் பாலியல் தொழிலில் இறக்கியுள்ளார்.
வழக்கை விசாரிக்கும் ஏடிஎஸ்பி சுப்ரஜா இந்த வழக்கில் தொடர்புடைய 80 பேரையும் அடையாளம் கண்டுவிட்டோம். அவர்களை கைது செய்து வருகிறோம். இவர்களில் 35 பேர் பாலியல் தொழிலில் உள்ள இடைத்தரகர்கள். மீதமுள்ளவர்கள் வாடிக்கையாளர்கள். சிறுமியின் வயதால் ஈர்க்கப்பட்டு அச்சிறுமியை பல இடைத்தரகர்களும் மீண்டும் மீண்டும் வியாபாரம் செய்து கைமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர் என்றார்.
லண்டன் வரை நீளும் பட்டியல்..
இந்த வழக்கில் இதுவரை ஒரு கார், 53 செல்போன்கள், மூன்று ஆட்டோக்கள், 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விஜயவாடா, ஹைதராபாத், காக்கிநாடா, நெல்லூரைச் சேர்ந்தவர்கள். இவர்களைத் தவிர ஒருவர் லண்டனில் இருக்கிறார். அனைவரையும் கைது செய்வோம் என போலீஸார் கூறியுள்ளனர்.
மறக்க முடியுமா சிவகங்கை சிறுமியை!
குண்டூரில் இப்போது நடந்துள்ளதை போல் 2015ல் சிவகங்கையைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு அவரது எட்டு வயதிலிருந்தே கட்டாய பாலியல் வல்லுறவு நடந்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்து அநாதரவாக நின்ற அச்சிறுமியை தாத்தா, அப்பா, அண்ணன், மாமா, அவளின் நெருங்கிய உறவினர்கள், அண்ணனின் நண்பன், பக்கத்து வீட்டில் வசித்துவந்தவர் எனப் பலரும் சித்தரவதை செய்தனர். காவல்துறையை நாடியபோது காவல் உயர் அதிகாரிகள் மூலமும் அவருக்கு பாலியல் தொந்தரவு நீடித்தது. அந்தக் காலக்கட்டத்தில் இருந்த சென்னை ஏடிஜிபி அலுவலக அதிகாரி வரை அச்சிறுமி கைநீட்டினார். வழக்கு இன்னும் முழுமையாக முடிந்தபாடில்லை. அதேபோல் கேரளாவில் நடந்த சூரியநெல்லி வழக்கையும் மறுக்க முடியாது.