உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள் தங்களின் அரசு நடவடிக்கைகள் நீதித்துறையின் ஒப்புதலோடு நிகழ்கின்றன என்று நினைத்தாலும், எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியலை நீதித்துறை முன்னிறுத்த வேண்டும் என்று நினைத்தாலும், நீதித்துறை என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு மட்டுமே கட்டுப்படும் என்று கூறியுள்ளார்.


அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் இந்திய அமெரிக்கர்கள் சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்துகொண்டு இவ்வாறு பேசியுள்ளார். 


உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, `இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தையும், 72வது குடியரசுத் தினத்தையும் எதிர்கொண்டு வரும் நிலையில், சற்றே வருத்தத்துடன் அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட அரசு நிறுவனங்களின் முழு பணியையும் நாம் கற்றுக் கொள்ளவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள் தங்களின் அரசு நடவடிக்கைகள் நீதித்துறையின் ஒப்புதலோடு நிகழ்கின்றன என்று நினைக்கின்றன. எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியலை நீதித்துறை முன்னிறுத்த வேண்டும் என்று நினைக்கின்றன. இந்த சிந்தனைகளின் காரணமாக அரசியலமைப்பு பற்றிய போதிய புரிதல் மக்களுக்குச் செல்வதில்லை’ எனக் கூறியுள்ளார். 



தொடர்ந்து பேசிய அவர், `நீதித்துறையைப் பலவீனப்படுத்தும் நோக்கில், பொது மக்களிடம் இப்படியான அறியாமை தொடர்ந்து பரப்பப்படுகிறது. எனவே சிலவற்றைத் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நாங்கள் அரசியலமைப்புக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை சீர்செய்வதற்கு, இந்தியாவின் அரசியலமைப்புக் கலாச்சாரத்தைப் பெறுக்க வேண்டும். தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் கடமைகள், பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வைப் பெருக்க வேண்டும். ஜனநாயகம் என்பதே அனைவரும் கலந்துகொள்ளும் ஒன்று தான்’ எனக் கூறியுள்ளார். 


இந்தியாவின் அமெரிக்காவும் அதன் பன்முகத்தன்மைக்காக பிரபலமடைந்திருப்பது குறித்து பேசியுள்ள உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா உலகம் முழுவதும் பன்முகத்தன்மை கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேலும், அமெரிக்காவில் பன்முகத்தன்மை மதிக்கப்படுவதாலே, அங்கிருக்கும் இந்தியர்கள் தங்கள் திறமையால் முன்னேற முடிந்ததையும் குறிப்பிட்டுள்ளார். நம்மை இணைக்கும் விவகாரங்களில் அதிகம் கவனம் செலுத்தி, நம்மைப் பிரிப்பவற்றில் இருந்து விலகியிருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். 


உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, `அமைதிக்கும், வளர்ச்சிக்குமான வழியை அனைவரும் உள்ளடக்கிய ஒற்றுமையான சமூகமே உருவாக்குகிறது. நம்மை இணைக்கும் விவகாரங்களில் அதிகம் கவனம் செலுத்தி, நம்மைப் பிரிப்பவற்றில் இருந்து விலகியிருக்க வேண்டும். தற்போதைய 21ஆம் நூற்றாண்டில், சிறிய பிரிவினை விவகாரங்கள் மனித, சமூக உறவுகளைத் தீர்மானிப்பதாக அமைந்துவிடக்கூடாது. நம் முன் இருக்கும் பிரிவினை விவகாரங்களை எதிர்த்து வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டும். அனைவரையும் உள்ளடக்காத அணுகுமுறை என்பது பேரிடருக்கான ஓர் அழைப்பு’ எனக் கூறியுள்ளார்.