கடந்த 2019ஆம் ஆண்டு, புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமான படை பாகிஸ்தான் பாலகோட்டில் பதில் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் பந்தர் என்ற பெயரில் இந்திய விமான படையால் நடத்தப்பட்ட தாக்குதல் நடந்து இன்றோடு 4ஆண்டுகள் ஆகிறது.
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்கு தொடக்கப்புள்ளி:
இதற்கு எல்லாம் தொடக்கப்புள்ளியாக, கடந்த 2016ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் உரியில் உள்ள ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 18 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்ற பதில் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது.
இதையடுத்து, 2019ஆம் ஆண்டு, மக்களவை தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பாதுகாப்பு வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், இந்திய ராணுவத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
12 நாள்களில் பதில் தாக்குதல்:
இந்த தாக்குதல் உலகளவில் பெரும் அதிபர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த தாக்குதல் நடந்த 12 நாள்களில், 2019ஆம் ஆண்டு, பிப்ரவரி 26ஆம் தேதி, அதிகாலை பாகிஸ்தான் எல்லை பகுதியான பாலகோட்டில் இந்தியா வான்படை தாக்குதலை மேற்கொண்டது.
பாலகோட்டில் உள்ள மிகப்பெரிய தீவிரவாத பயிற்சி முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. பதில் தாக்குதலுக்காக இந்திய விமான படையின் ஒட்டு மொத்த மிராஜ் 2000 போர் விமான குழுவும் இந்தியா-பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி சென்றது.
கடந்த 1971ஆம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு, இந்திய விமானம் ஒன்று எல்லை தாண்டி வான்வழித் தாக்குதலை நடத்தியது இதுவே முதல் முறை.
ஆபரேஷன் குரங்கு என பெயர் வைப்பதற்கு காரணம்?
வான்வழித் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு, இந்தியாவுக்கு இந்திய விமான படை விமானங்களை பாதுகாப்பாக மீட்டு கொண்டு வருவதற்கான முழு நடவடிக்கைக்கும் 'ஆபரேஷன் பந்தர்' (குரங்கு) என பெயரிடப்பட்டது.
ரகசியத்தை பேணுவதற்கும், வான்வழித் தாக்குதல்களின் திட்டங்கள் வெளியே கசிந்துவிடாமல் பார்த்துக்கொள்வதற்கும் இந்தப் பெயர் வைக்கப்பட்டது. குறிப்பிட்ட இந்த பெயர் வைப்பதற்கு பின்னால் காரணம் எதுவும் இல்லை என்றாலும், இந்தியாவின் போர் கலாச்சாரத்தில் குரங்குகள் எப்போதும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது முக்கிய காரணமாக இருக்கலாம்.
ராமாயணத்தில் ராமரின் நண்பன் அனுமன் அமைதியாக இலங்கைக்குள் நுழைந்து அசுர மன்னன் ராவணனின் தலைநகரம் முழுவதையும் அழித்திருப்பார். ஆபரேஷன் பந்தரும் இந்த ராமாயண கதைக்கு இணையாக நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்கு இந்திய விமான படை விமானங்கள் ஊடுருவி பயங்கரவாத முகாம்களில் அழிவை ஏற்படுத்தி திரும்பியது.