நாட்டின் சட்டம் மற்றும் நீதி அமைப்பில் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியதோடு, உச்சநீதிமன்றத்தின் 50-வது நீதிபதியாகவும் பதவி வகித்து வருகிறார் DY சந்திரசூட். விதிகளை மீறுபவர்களிடமும், தவறு இழைத்தவர்களிடமும் கடுமையாக நடந்துகொள்வதோடு, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை உணர்ந்தும் செயல்பட்டு வருகிறார். தாராளவாத மற்றும் முற்போக்கான தீர்ப்புகளுக்காக நீதித்துறையில் மட்டுமின்றி, பொதுமக்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டப்படுகிறார்.
அயோத்தி தீர்ப்பு, தனிமனித உரிமை, சபரிமலை வழக்கு, சஹ்ராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதிகளின் குழுவில் இவரும் முக்கிய பங்கு வகித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள சல்லிவன் & குரோம்வெல் மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பயிற்சியை தொடங்குவதற்கு முன்பாக, டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், தனது சட்டபடிப்பு மற்றும் மேற்படிப்பினை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஜூனியர் வழக்கறிஞராக தனது தொழிலை தொடங்கி பல வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார். 2000-ஆவது ஆண்டுகளில் மும்பை நீதிமன்றத்தில் நீதிபதியான சந்திரசூட், பின்னர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். அவரது நெருங்கிய வட்டாரங்கள் மட்டுமின்றி அவர் குறித்து பலரும் அறிந்த சுவாரஸ்ய தகவல்கள் தான் இவை. ஆனால், இதையும் தாண்டி யாரும் அறியாத ஒரு மறைமுக வாழ்க்கையையும் சந்திரசூட் வாழ்ந்ததை அவரே வெளிப்படையாக பேசியுள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மாநாடு ஒன்றில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், தனது 20-களில் தானும் ஒரு மூன்லைட் வாழ்க்கையை (யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கூடுதலாக வேறு ஒரு வேலையை செய்வது) வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார். அதன்படி, தனது 20-களின் முற்பகுதியில், . 'ப்ளே இட் கூல்', 'டேட் வித் யூ' அல்லது 'சண்டே ரிக்வெஸ்ட்' போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளதாக கூறினார். அதாவது, பகலில் வழக்கறிஞராக பயிற்சி செய்து வந்த நிலையில், இரவில் ரேடியோ ஜாக்கியாகவும் பணிபுரிந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ கிளிப் பார் & பெஞ்ச் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
அதில் பேசியுள்ள சந்திரசூட், இது பலருக்குத் தெரியாது, ஆனால் எனது 20 களின் தொடக்கத்தில் அகில இந்திய வானொலியில் ரேடியோ ஜாக்கியாக 'ப்ளே இட் கூல்', 'டேட் வித் யூ' அல்லது 'சண்டே ரிக்வெஸ்ட்' போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன். இசை மீதான எனது அன்பு இன்றும் தொடர்கிறது. வழக்கறிஞர்கள் வழக்காடுவதை தினசரி இசையாக கேட்டு முடித்த பிறகு, நான் திரும்பிச் சென்று, என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் காதுகளுக்கு இனிமையாக இருக்கும் இசையைக் கேட்பேன்" என சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார்.