இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரபல மணல் சிற்பக் கலைஞர் தக்காளிகளைக் கொண்டு உருவாக்கிய உலகின் மிகப்பெரும் சாண்டாகிளாஸ் சிற்பம் கவனம் ஈர்த்துள்ளது.
கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டுகளில் கிறிஸ்துமஸ் விழாக்கள் எளிமையாகக் கொண்டாடப்பட்ட நிலையில், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவை இந்த ஆண்டு மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
தக்காளி சாண்டா கிளாஸ்!
இந்நிலையில், ஒடிசாவில் உள்ள கோபால்பூர் கடற்கரையில் தக்காளிகள் மற்றும் மணல் கொண்டு பிரபல மணல் சிற்பக் கலைஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சுதர்சன் பட்நாயக் உலகின் மிகப்பெரும் சாண்டாகிளாஸ் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். இந்த சாண்டா கிளாஸின் மணல் சிற்பத்தை திரளாக வந்து மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
27 அடி உயரமும் 60 அடி அகலமும் கொண்ட இந்த மணற் சிற்பத்துக்காக 1.5 டன்கள் தக்காளி பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுதர்சன் பட்நாயக் முன்னதாகத் தெரிவித்துள்ளார்.
சுதர்சன் பட்நாயக்குக்கு அவரது மாணவர்கள் இணைந்து உதவிய நிலையில், ட்விட்டரில் தானும் தனது மாணவர்களும் இணைந்து உருவாக்கிய சாண்டா கிளாஸ் சிற்பத்தின் புகைப்படம், வீடியோக்களை முன்னதாகப் பகிர்ந்துள்ள நிலையில், இணையத்தில் இவை அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
விழாக்கோலம் பூண்ட பழமையான தேவாலயங்கள்
சென்னை பெசண்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், நூற்றாண்டு பழமையான சென்னையின் புனித தோமையார் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில், மழையை பொருட்படுத்தாது மக்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்டு வழிபட்டு வருகின்றனர்.
அதே போல், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம், தூத்துக்குடி, பனிமய மாதா தேவாலயம், புதுச்சேரி முழுவதும் உள்ள தேவாலயங்களில் கூட்டுப் பிரார்த்தனைகளில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபட்டு வருகின்றனர்.
அதே போல் தலைநகர் டெல்லி கதீட்ரல் தேவாலயம், கேரள மாநிலம், திருவனந்தபுரம், கொச்சியில் உள்ள பிரபல தேவாலயங்களில், கோவா தலைநகர் பனாஜி, கர்நாடகாவின் பெங்களூரு மாநகர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் விழா களைகட்டியுள்ளது.
இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்தலகேம் கிறிஸ்துமஸ் விழாக் கோலம் பூண்டது. கத்தோலிக கிறிஸ்தவர்களின் தலைமையிடமான வாடிகனில், ரோமன் கத்தோலிக சபையின் தலைவரான போப் ஃபிரான்சிஸ் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூருவதோடு தேசங்கள், கலாச்சாரங்கள் மற்றும் இனங்களின் எல்லைகளைக் கடந்து, பன்முகத்தன்மையை உள்ளடக்கிய ஒரு பண்டிகையாக கிறிஸ்துமஸ் நாள் மாறியுள்ளது.