சிறுவனிடம் புத்த மதகுரு தலாய்லாமா அத்துமீறிய விவகாரத்தில்,  சிறுவனின் குடும்பத்தைக் கண்டித்தும், அங்கு கூடியிருந்த சிரித்த மக்கள் மற்றும் தலாய்லாமாவுக்கு கண்டனம் தெரிவித்தும் பாடகி சின்மயி வீடியோ பகிர்ந்துள்ளார்.


மன்னிப்பு கோரிய தலாய்லாமா:


சிறுவனை நாக்கில் முத்தமிடுமாடு  என மதகுரு தலாய் லாமா கோரும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் முன்னதாக தலாய்லாமா தன் செயலுக்கு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். அதோடு விளையாட்டுத்தனமாகவே அந்த செயலில் ஈடுபட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.


இந்நிலையில், “தலாய்லாமா மன்னிப்பு கேட்டு விட்டார்; ஆனால் இந்நேரம் வேறு எவராகவாவது இருந்தால், அவர் சிறைக்கு அனுப்பப்பட்டிருப்பார்” எனவும் பாடகி சின்மயி பதிவிட்டுள்ளார்.


மதகுருமார்கள், பாபாஜிக்களை நம்பாதீர்கள்...


சிறுவனிடம் என் நாக்கில் முத்தமிடு என தலாய்லாமா கேட்பது, அதற்கு அந்த சபையில் இருக்கும் அனைவரும் சிரிப்பது ஆகிய காட்சிகள் அடங்கியிருக்கு வீடியோவைப் பகிர்ந்து சின்மயி தெரிவித்திருப்பதாவது:


“குடும்பங்கள் தொடங்கி சமூகம் வரை மதகுருமார்கள் பொதுவாக பெரும் பலத்துடன் வலம் வருகின்றனர்.  மொத்த குடும்பமும் இது போன்ற நபர்களைப் பின்பற்றும்போது அது அக்குடும்பத்தில் இருக்கும் பெண்கள், குழந்தைகளை இதுபோன்ற அத்துமீறல்களுக்கு இரையாக்குகிறது. இவற்றை எல்லாம் பொறுத்துக் கொள்வதுதான் குருபக்தி, அர்ப்பணித்தல் என மக்கள் மூளை சலவை செய்யப்படுகிறார்கள்.


இரையாகும் சிறுவர்கள், பெண்கள்


அவர்கள் பின்வாங்கினாலும், இது சாதாரண விஷயம், குருபக்தி எனக்கூறி அதனை மொத்த குடும்பமும் மடைமாற்றி விடுவார்கள். இந்த சிறுவன் வீடியோவில் ஒரு ஒரு முறையும் பின்வாங்குகிறான், பொறுத்துக்கொள்கிறான் என்பது நீங்கள் கவனித்திருந்தால் தெளிவாகத் தெரிகிறது.


ஆனால் தலாய்லாமா என் நாக்கில் முத்தமிடு எனக் குழந்தையை கேட்கும்போது அங்கிருக்கும் மொத்த சபையும் சிரிக்கிறது. ஒரு குழந்தையிடம் அத்துமீறும் தருணத்தில் மொத்த சமூகமும் இப்படி சிரிப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது.  இது போன்ற ஒரு மோசமான நிகழ்வை நியாபகம் வைத்து அந்தக் குழந்தை வளரும் என்பதும் வருத்தமளிக்கிறது.


சவுக்கடி கொடுக்கப்பட வேண்டும்...


சிறுவன் அவர் தவறான நோக்கத்தில் வருகிறார் எனத் தெரிந்து தான் பின்வாங்குகிறான், ஆனால் அங்கிருப்போர் சிரித்து இதனை மடைமாற்றுகின்றனர். இந்தச் சிறுவன் வளர்ந்து தனக்கு நேர்ந்தது தவறானது எனப் புரிந்து கொள்வான் என நம்புகிறேன். என் நாக்கில் முத்தமிடு என தலாய் லாமா கேட்டபோது அந்த சபையில் சிரித்தவர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும், சவுக்கடி தரப்பட வேண்டும். 


நாங்கள் தாந்திரீகர்கள், ஜோதிட சிகாமணிகள், ப்ளாக் மேஜிக் செய்பவர்கள் என சொல்லிக் கொள்ளும் இது போன்ற நபர்கள் பற்றி ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இவர்கள் எல்லாம் தொடர்ந்து ஒரு குடும்பத்தில் ஒரு குறிப்பிட்ட நபரைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் அத்துமீறுகிறார்கள். இத்தகைய நபர்கள், அந்ததந்த குடும்பத்தின் மேல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி சக்திவாய்ந்தவர்களாக மாறுகிறார்கள் என அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.


அப்பாவிகளை பலிகடாவாக்குவார்கள்...


எனக்குமே இவற்றில் சில நம்பிக்கை உள்ளது. சிலர் உண்மையாக இருக்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த குடும்பமும் இது போன்ற பாபாஜி, சுவாமிஜி உள்ளிட்டோருக்கு அடிபணிந்து இருப்பதும் , இவர்களின் ஒவ்வொரு செயலையும் அவர்கள் வழிநடத்துவதும் வேடிக்கையாக இருக்கிறது. செவ்வாய் தோஷம் அது இதுவென்று குடும்ப உறுப்பினரை இப்படி ஒட்டுமொத்த குடும்பமும, பெற்றோரும் பணியவைப்பது மோசமானது. நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது என்பதை மட்டும் நான் நம்புகிறேன்.


குழந்தைகள், மிருகங்களிடமும் இவ்வாறு அத்துமீறுபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களின் கண் எதிரிலேயே தண்டிக்கப்பட வேண்டும், ஆனால் அது நடப்பதில்லை. தங்கள் மூளையை உபயோகிக்காமல் மெத்த படித்தவர்கள் வரை இப்படி மதகுருமார்களைப் பலரும் பின்பற்றுவது கவலை அளிக்கிறது. 


 






ஜோதிடர்கள், மதகுருமார்கள், சாமியார்கள் என அனைவரும் முதலில் இப்படிதான் நாம் பலவீனமாக இருக்கும்போது நம்மைக் கவர்ந்து, சிறு சிறு விஷயங்கள் செய்து நம் நம்பிக்கையைப் பெறுவார்கள். ஆனால் நாம் அப்பாவிகளாய் இருந்தால் அவர்கள் உபயோகித்துக் கொள்ள தொடங்குவார்கள். குழந்தையின் பாதுகாப்பை விட வேறு எதுவும் அவசியமில்லை. மதகுரு, சாமியார், சுவாமிஜி ஜோதிடர் என இவை எதுவுமே பொருட்டல்ல. 


 குழந்தைகள் மிகவும் அழகானவர்கள், இவர்களின் பேச்சைக் கேட்டு குழந்தைகளை ஆட்டுவிக்கும் பெற்றோர் இந்தக் குழந்தைகளுக்குத் தேவையில்லை. நான் ஒரு தாயாகசொல்லிக்கொள்வது என்னவென்றால் இது போன்ற கடவுளாக தங்களைக் கருதும் நபர்களிடம் உங்கள் குழந்தைகளை விடாதீர்கள்” எனப் பேசியுள்ளார்.