மகாத்மா ஜோதிராவ் பூலே ஒரு சமூக சீர்திருத்தவாதி, சிந்தனையாளர், எழுத்தாளர் மற்றும் ஆர்வலர் ஆவார், அவர் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகங்களை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக இன்றளவும் நினைவுகூறப்படுகிறார்.
ஜோதிராவ் பூலே
இவர் 1827 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் பிறந்தார். இவரது தாயார் இவருடைய சிறு வயதிலேயே இறந்துவிட்டார், அவரது தந்தை ஒரு பூ வியாபாரியாகவும் விவசாயியாகவும் இருந்துள்ளார். இப்பேர்ப்பட்ட எளிமையான பின்னணியில் இருந்து வந்து இந்திய சமூகத்தில் வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்த அவர் செய்த செயல்கள் ஏராளம். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக முதல் பள்ளியைத் திறந்து சாதி எதிர்ப்பு இயக்கத்தை வலுவாக ஆதரித்தார். பெண்களுக்கான கல்வியை ஊக்குவிக்கும் முயற்சிகளையும் அவர் மேற்கொண்டார்.
அவரது பிறந்தநாளில் அவரைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்:
- ஜோதிராவ் பூலே, ஒடுக்கப்பட்ட சமூகங்களின், குறிப்பாக தலித்துகள் மற்றும் பெண்களின் சமூக மேம்பாட்டிற்காக ஒரு அமைப்பான 'சத்தியசோதக் சமாஜ்'இன் முன்னோடியாக இருந்தார்.
- ஜாதி, பாலினம், மதம் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் கல்வி வேண்டும் என்ற வலுவான கருத்தை ஆதரித்தார். மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் பெண்களுக்கான முதல் உள்நாட்டுப் பள்ளியை நிறுவினார்.
பூலேவின் எழுத்து
- ஜோதிராவ் பூலே, ஜாதி அமைப்பை விமர்சித்து தலித்துகளின் உரிமைகளுக்காக வாதிட்ட புகழ்பெற்ற புத்தகமான “குலாம்கிரி” உட்பட சமூகப் பிரச்சினைகளில் பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதினார்.
- தலித்துகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட சமூகங்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளை எடுத்துரைக்கும் "தீன்பந்து" பத்திரிகையையும் நிறுவினார்.
- ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்க ஜோதிராவ் பூலே மேற்கொண்ட முயற்சிகள் அவருக்கு "மகாத்மா பூலே" என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது.
ஜோதிராவ் பூலேவின் சிந்தனைகள்
- "சாதி என்பது ஒரு அரக்கன், அது வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் குறுக்கிடும்."
- "செயல் இல்லாத அறிவு பயனற்றது, அறிவு இல்லாத செயல் பயனற்றது."
- "நீங்கள் ஒரு மனிதனுக்கு கல்வி கற்பித்தால், நீங்கள் ஒரு நபருக்குதான் கல்வி கற்பிக்கிறீர்கள். ஆனால், ஒரு பெண்ணுக்குக் கல்வி கொடுத்தால், முழுக் குடும்பத்துக்கும் கல்வி கற்பிக்கிறீர்கள் என்று பொருள்.
- "எந்தவொரு மனிதனும் அநீதியை பொறுத்துக் கொள்ளக்கூடாது, அது தனக்கு எதிராக இருந்தாலும் சரி, மற்றவருக்கு எதிராக இருந்தாலும் சரி."
- "ஒடுக்கும் சாதி அமைப்பை எதிர்த்து, நியாயமான, சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க நாம் ஒன்றுபடுவோம்."