சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் பாங்காங் ஏரியின் குறுக்கே இரு கரைகளையும் இணைக்கும் வகையில் பாலம் கட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதல் போக்கு சமீப காலமாகவே அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் 15, 2020ல் இந்தியா சீனா இடையே லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. அப்போது இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து எல்லையில் இருதரப்பு சார்பில் அதிகளவில் படைகள் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.
இதனைத் தொடர்ந்து இந்தியா - சீனா இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் அதே கல்வான் பகுதியில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் தற்போது சீனாவின் கொடியையும் பறக்க விட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட பின்னர் இருநாடுகளின் அமைச்சர்கள் மற்றும் ராணுவ கமாண்டர்கள் இடையில் பலச்சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அப்போது இந்தியாவும் சீனாவும் எல்லையில் இருந்து ராணுவ படைகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சீன ராணுவம், கிழக்கு லடாக்கில் பாங்கோங் த்சோவின் (ஏரி) வடக்கு மற்றும் தெற்கு கரைகளை இணைக்கும் ஒரு பாலத்தை அமைத்து வருகிறது. இது மக்கள் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) துருப்புக்கள் மற்றும் ஆயுதங்களை எளிதாக நகர்த்துவதற்கான நேரத்தை கணிசமாகக் குறைக்கும் எனவும் கூறப்படுகிறது. பாலம் கட்டப்பட்டு வருவதற்கான செயற்கைகோள் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அதேபோல கட்டுமானப் பணிகள் சில காலமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒட்டுமொத்த தூரம் 140 முதல்150 கிமீ குறைக்கும் என்று மற்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பாலம் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (எல்ஏசி) 25 கிமீ முன்னால் அமைந்துள்ளது.
சீன ராணுவத்தின் இந்தப்போக்கு இருதரப்புக்கு இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கூடும் என கூறப்படுகிறது.