கர்நாடாக மாநிலம் பெலகாவியில் உள்ள கிராமத்தில் பெண் ஒருவரை நிர்வாணப்படுத்தி மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் மகனும், அதே பகுதியை சேர்ந்த மற்றொருவரின் மகளும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனை தொடர்ந்து இளைஞரின் வீட்டிற்கு சென்ற பெண் வீட்டார், வீட்டை அடித்து சேதப்படுத்தியதோடு, அந்த இளைஞரின் தாயாரை நிர்வாணப்படுத்தி அருகில் இருக்கும் மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அப்பகுதியில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க 2 ரிசர்வ் போலீஸ் குழுக்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே இச்சம்பவத்திற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதிலளித்த அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, அரசியல் நோக்கத்திற்காக இந்த சம்பவத்தை பாஜக பயன்படுத்துகிறது என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில், “ கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல நடந்துள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா எங்களை அரசியல் ரீதியாக குறிவைத்துவிட்டார். துரதிஷ்டவசமாக பெலகாவியில் பெண்ணுக்கு எதிராக நடந்த சம்பவத்தை அரசியல் காரணத்திற்காக பயன்படுத்திக்கொள்கிறார்.
பெலகாவியில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. இதனை அரசியல் காரணத்திற்காக நட்டா பயன்படுத்துவது வெட்கக்கேடானது. பெலகாவி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், நமது உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி.பரமேஸ்வரா மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாநில பாஜக தலைவர்களும் அரசு நடவடிக்கையில் திருப்தி அடைந்துள்ளனர். சம்பவம் நடந்த 4 நாட்களுக்கு பின் ஜே.பி நட்டா இந்த வழக்கை மீண்டும் கிளறி இருப்பது பெண்கள் மீது அவர் கொண்ட உண்மையான அக்கறையை விட அரசியல் உள்நோக்கமே காரணம். பெண்கள் மீது அவர் உணமையான அக்கறை கொண்டிருந்தால் இதற்கு முந்தைய பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். தேசிய குற்றப்பிரிவு (NCRB) அறிக்கையின்படி, கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியில் கடந்த ஆண்டு (2022) பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக 17,813 வழக்குகள் பதிவாகியுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் (2021) 14,468 வழக்குகள் பதிவாகியுள்ளன. அப்போது பா.ஜ.க. தேசிய தலைவர் என்ன செய்து கொண்டிருந்தார்? இவர்களது ஆட்சியில் ஆண்டுதோறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அவர் கவனிக்கவில்லையா?
மணிப்பூர், குஜராத், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் என எங்கு பாஜக ஆட்சியில் இருக்கிறதோ அங்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாக உள்ளது என என்.சி.ஆர்.பி தெரிவித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.