உத்தரகாண்டில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் உத்தரகாண்ட் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி விஜய் குமார் ஜோக்டாண்டே ஆகியோர் சென்ற ஹெலிகாப்டர், பித்தோராகர் மாவட்டத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என உத்தரகாண்ட் அரசு தகவல் வெளியிட்டுள்ளது.


அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்:


இதுகுறித்து பித்தோராகர் மாவட்ட ஆட்சியர் வினோத் கிரிஷ் கோஸ்வாமி கூறுகையில், "மிலாம் பனிப்பாறை பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் மதியம் 1 மணியளவில் புறப்பட்டு சென்றது.


இருப்பினும், வானிலை மேகமூட்டமானதாக இருந்ததாலும் பாதை தெளிவற்று இருந்ததாலும் 42 கிமீ தொலைவில் உள்ள ரலாம் கிராமத்தில் உள்ள ஹெலிபேடில் மதியம் 1.30 மணியளவில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் விமானியைத் தவிர 3 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். முன்சியாரிக்கு திரும்ப வானிலை தெளிவடையும் வரை காத்திருக்கிறார்கள்.


 






தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?


தேர்தல் ஆணையரிடம் இரண்டு முறை பேசியுள்ளேன். வானிலை சீரடைந்தால், மீண்டும் முன்சியாரிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இல்லையெனில், அவர்கள் ரலம் அருகே உள்ள ஐடிபிபி முகாமில் தங்குவார்கள்" என்றார்.


உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத் சட்டப்பேரவை தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள கேதார்நாத் சட்டப்பேரவை தொகுதி, தற்போது பாஜக வசம் உள்ள பவுரி கர்வால் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.


கடந்த ஜூலை மாதம், எம்எல்ஏ ஷைலா ராவத் காலமானதைத் தொடர்ந்து, அந்த தொகுதி காலியானது. கடந்த 2022 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் ராவத் வெற்றி பெற்றார். 2012இல் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். ஆனால், 2022 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார்.


இதையும் படிக்க: அரசும் ஆளுநரும் புது காதலர்கள் போல உள்ளனர்- அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ