என்எஸ்ஜி எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை உதயமான தினத்தை முன்னிட்டு தேசிய பாதுகாப்புப் படை வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்களது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, தைரியம், உறுதிப்பாடு ஆகியவற்றைப் பிரதமர் பாராட்டியுள்ளார்.


"அசைக்க முடியாத அர்ப்பணிப்பு"


இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) உதய தினத்தை முன்னிட்டு, நமது தேசத்தைப் பாதுகாப்பதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, தைரியம், உறுதிப்பாட்டுன் செயல்படும் அனைத்து என்எஸ்ஜி வீரர்களுக்கும் இந்தியா தலை வணங்குகிறது.


 






அச்சுறுத்தல்களிலிருந்து நமது நாட்டைப் பாதுகாப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பு போற்றத்தக்கது. அந்தப் பணி வீரத்தையும் சிறந்த தொழில்முறைத் தன்மையையும் உள்ளடக்கியதாகும்" என பதிவிட்டுள்ளார்.


கடந்த 1984 ஆம் ஆண்டு, ஜூன் மாதம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் இருந்து தீவிரவாதிகளை அகற்றும் வகையில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, NSG எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது.


கடந்த 1986 ஆம் ஆண்டு, செப்டம்பர் 22 ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றம் தேசிய பாதுகாப்பு படை சட்டத்தை நிறைவேற்றிய பிறகு NSG அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது. பயங்கரவாதம், கிளர்ச்சி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் நாடுகடந்த குற்றங்களில் இருந்து இந்தியாவைப் பாதுகாப்பதே என்எஸ்ஜியின் நோக்கம்.


பிரிட்டனில் உள்ள SAS மற்றும் ஜெர்மனியின் GSG-9 மாதிரியான ஒரு சிறப்பு பாதுகாப்பு படைப் பிரிவாக NSG உருவாக்கப்பட்டது.


இதையும் படிக்க: DA hike: தீபாவளி போனஸ் - மத்திய அரசு ஊழியர்கள், பென்ஷன் பயனாளர்களுக்கு ஜாக்பாட் - 3% அகவிலைப்படி உயர்வு