அமெரிக்க டாலரை மற்ற நாணயங்களுடன் ஒப்பிடுகையில், இந்திய ரூபாயின் மதிப்பு சீராகவே உள்ளது என்றும் டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவான ரூ.82 க்கு மேல் சரிவை கண்டு வருகிறது.
இதற்கிடையே, உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அந்த மாநாட்டில் பங்கேற்றபின், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் டாலருக்கு எதிராக இந்தியாவின் ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நிதியமைச்சர், சர்வதேச சந்தையில், வளர்ந்து வரும் நாடுகளின் நாணயங்களை விட இந்திய ரூபாயின் மதிப்பு நல்ல நிலையிலே உள்ளது. மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாக நான் பார்க்கவில்லை, அமெரிக்கா டாலரின் மதிப்பே உயர்ந்து வருவதாகவே பார்க்கிறேன் எனத் தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமனின் இந்த கருத்து கேலிக்குள்ளாகி வருகிறது. அவரின் கருத்தை பங்கமாக கலாய்த்துள்ள பாஜக மாநிலங்களை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, "நாங்கள் தோற்கவில்லை. எதிர் அணி வென்றுள்ளது" என நிர்மலா சீதாராமன் கூறுவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து "வாழ்த்துகள். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வென்றுள்ளது" என பதிவிட்டுள்ளார். நிர்மலா சீதாராமன், முதுகலை பட்டத்தை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ரூபாய் சரியவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்புதான் உயர்ந்து வருகிறது என நிதியமைச்சர் கூறியுள்ளார். முற்றிலும் உண்மைதான். நாங்கள் தோற்கவில்லை, எதிர்கட்சிதான் வென்றுள்ளது என தேர்தலில் தோற்கும் வேட்பாளரும் கட்சியும் எப்போதும் சொல்லும்" என பதிவிட்டுள்ளார்.
ரஷிய - உக்ரைன் போரின் தாக்கம், உலகளவில் கடுமையான பணவீக்கம், உலகளவில் கடுமையாக்கப்பட்டு வரும் நாணய நிபந்தைனகள், தொற்றுநோயினால் ஏற்பட்ட நீடித்த விளைவுகள் காரணமாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் அடுத்த ஆண்டு ஒட்டுமொத்த மந்தநிலையை எதிர்கொள்ளும் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்திருந்தது.
இந்தியாவை பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டில் அதன் வளர்ச்சி விகிதம் 6.8 விழுக்காடாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. மார்ச் 31ஆம் முடிவடைந்த நிதியாண்டில் 8.7 விழுக்காடு வளர்ச்சி விகிதத்தை இந்தியா எட்டியுள்ளது. ஐஎம்எஃப் அமைப்பால் ஜூன் 2022இல் வெளியிடப்பட்ட கணிப்பை ஒப்பிடுகையில் இந்தியாவின் இந்த ஆண்டுக்கான வளர்ச்சி விகிதம் 0.6 சதவீத புள்ளிகளால் கீழ்நோக்கி திருத்தப்பட்டுள்ளது.