நடிகையும் அமைச்சருமான ரோஜாவை கொலை செய்ய முயற்சி செய்ததாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விசாகா பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பிரபல நடிகையும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சருமான ரோஜா பங்கேற்றார்.
ஜன சேனா கட்சியினர் தாக்குதல்:
இப்போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பிய அமைச்சர் ரோஜா உள்ளிட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் விமான நிலையம் சென்று கொண்டிருந்தனர். அப்போது நடிகர் பவன் கல்யாண் கட்சியைச் சேர்ந்த ஜன சேனா கட்சி நிர்வாகிகள் ரோஜாவின் காரை மறித்தனர்.
பின்னர், ஒய்.எஸ்.ஆர் கட்சியை சேர்ந்தவர்கள் மீது, ஜன சேனா கட்சி நிர்வாகிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இத்தாக்குதலில் ரோஜாவின் உதவியாளருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொலை முயற்சி-25 பேர் கைது
இதையடுத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் ஜன சேனா கட்சியைச் சேர்ந்த 25 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது, காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, அமைச்சர் ரோஜாவை கொலை முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆந்திராவில் அமைச்சர் ரோஜா உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.