2022ம் ஆண்டுக்கான உலக பட்டினி குறியீட்டில் (GHI) இந்தியா 107 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளத்தை ஒப்பிடுகையில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. 121 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 107 வது இடத்தை பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


கடந்த 2021ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா 101ஆவது இடத்தை பிடித்திருந்தது. சீனா, துருக்கி மற்றும் குவைத் உள்பட பதினேழு நாடுகள் இந்த பட்டியலில் முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டன என பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டைக் கண்காணிக்கும் உலகளாவிய பட்டினி குறியீட்டின் இணையதளம் தெரிவித்திருந்தது.


உலக பட்டினி அறிக்கைக்கு எதிராக இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், அறிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளது ஆர்எஸ்எஸ் அமைப்பு. 2022ஆம் ஆண்டுக்கான உலக பட்டினி குறியீடு பொறுப்பற்ற முறையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விஷமத்தன்மையாக இருப்பதாகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொருளாதார பிரிவான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் குறிப்பிட்டுள்ளது.


 






இந்தியா மீது அவதாறு பரப்பியுள்ள அறிக்கை வெளியிட்டாளர்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுதேசி ஜாக்ரன் மஞ்ச் கோரிக்கை விடுத்துள்ளது. அயர்லாந்து தொண்டு நிறுவனமான கன்சர்ன் வேர்ல்டுவைடு, ஜெர்மன் அமைப்பான வெல்ட் ஹங்கர் ஹில்ஃப் ஆகியவை இணைந்து உலக பட்டினி அறிக்கையை தயார் செய்துள்ளது.


உலக பட்டினி அறிக்கை தொடர்பாக சுதேசி ஜாக்ரன் மஞ்ச் வெளியிட்ட அறிக்கையில், "ஜெர்மனியின் வெல்ட் ஹங்கர் ஹில்ஃப் என்ற அரசு சாரா அமைப்பு, இந்தியாவை இழிவுபடுத்தும் வகையில் பொறுப்பற்ற முறையில் உலக பசி குறியீட்டை தயார் செய்துள்ளது. இந்த அறிக்கை உண்மையில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. 


இது தரவுகளின் பார்வையில் மட்டும் தவறானது அல்ல, பகுப்பாய்வு மற்றும் வழிமுறையின் பார்வையிலும் கேலிக்குரியதாக உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 116 நாடுகளின் பட்டியலில் இந்தியா 101வது இடத்தில் இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்ட உலகளாவிய பட்டினி குறியீட்டை இந்தியா கடுமையாக எதிர்த்தது. பட்டியலை தயார் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட தரவுகள், அதன் முறை ஆகியவை குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தது.


இந்த பிழைகள் சரி செய்யப்படும் என்று உலக உணவு அமைப்பு (FAO) கூறியது. ஆனால், மீண்டும் அதே தவறான தரவு மற்றும் வழிமுறையைப் பயன்படுத்தி, இந்த ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2022 உலக பட்டினி குறியீடு அதன் வெளியீட்டாளர்களின் தவறான நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளது.