சத்தீஸ்கர் மாநிலத்தில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து, 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் வாகன விபத்து:
இந்த விபத்து குறித்து சத்தீஸ்கர் மாநில துணை முதல்வர் விஜய் சர்மா கூறுகையில், "கவர்தாவில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பிக்-அப் வாகனம் கவிழ்ந்ததில், தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இதில் அன்புக்குரியவர்களை இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் எனது இரங்கல் தெரிவிக்கிறேன்.
இதில், காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய விரும்புகிறேன், மாநில அரசின் மேற்பார்வையில், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளையும் வழங்குவதில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
முதற்கட்டமாக 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், தற்போது, சத்தீஸ்கர் மாநிலத்தில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து, 18 பேர் உயிரிழந்ததாக காவல் அதிகாரி எஸ்.பி தெரிவித்ததாக ஏ.என்.ஐ செய்தி முகமையின் சமீபத்திய செய்தி தெரிவித்துள்ளது.
காவல்துறை விசாரணை:
சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா மாவட்டம் குக்தூரில், தொழிலாளர்காள் வேலையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் பயணம் செய்த பிக்-அப் வாகனம், பஹ்பானி என்ற பகுதி அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. வாகனத்தில் சுமார் 25 முதல் 30 பேர் இருந்தனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.