சத்தீஸ்கரை சேர்ந்த ஒருவர், குடும்ப நல நீதிமன்றத்தில், போதை பழக்கத்திற்கு அடிமையான தனது மனைவியிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று தாக்கல் செய்துள்ளார்.
சத்தீஸ்கரின் பாங்கி மோங்ரா பகுதியை சேர்ந்த நபரின் குடும்பம் சுத்த சைவத்தை பின்பற்றுபவர்களாக இருந்து வந்துள்ளனர். இந்தநிலையில், இவருக்கு, ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
கல்யாணம் முடிந்து 7 நாட்கள் திருமண வாழ்க்கை நன்றாக செல்ல, 8ம் நாள் அந்த நபரின் மனைவி படுக்கையில் முழு குடிபோதையில் இருந்துள்ளார். இதையடுத்து, அதிர்ச்சியடைந்த நபர், மனைவியை மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளார்.
அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், உங்கள் மனைவி அசைவ உணவு சாப்பிடுவது, குட்கா மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அந்த பெண்ணின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே வந்துள்ளது. அந்த பெண்ணின் மாமியார் அந்த பெண்ணிடம் குட்கா மற்றும் மது பழக்கத்தை கைவிடுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண், அவரது மாமியாரை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். சில நாட்களுக்கு பிறகு, அந்த பெண் தனது மாமியாரை போதையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த நபர் மனமுடைந்து விவாகரத்து செய்ய முடிவு எடுத்து, குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ தனது மனைவி தினமும் படுக்கையறையில் குட்கா சாப்பிட்டு எச்சில் துப்புகிறார். இதுபற்றி கேட்டால் தன்னையும், தனது தாயாரையும் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்குகிறார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக எங்களுக்குள் சண்டை ஏற்பட்டபோது இரண்டுமுறை பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். போதை பழக்கத்திற்கு அடிமையான மனைவி என்னை தொடர்ந்து துன்புறுத்துவதால், அவரிடமிருந்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார்.
குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அந்த நபர் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவானது நீதிபதிகள் கவுதம் பாதுரி மற்றும் ராதாகிஷன் அகர்வால் ஆகியோர் அடங்கிய இரட்டை பெஞ்ச் ஏற்றுக்கொண்டது.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், அசைவ உணவு, குட்கா அல்லது பான் மசாலா சாப்பிட்டு, மது அருந்தி விட்டு ஒரு பெண் தன் கணவனை துன்புறுத்தினால், அது கொடுமையாக மாறி விவாகரத்துக்கு அடிப்படையாக அமையும். உயர் நீதிமன்ற பெஞ்ச் குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை நிராகரித்தது. தொடர்ந்து, விவாகரத்து கோரிய நபரின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டது.