நடுவானில் பறந்துகொண்டிருக்கும் விமானத்தில் அமர்ந்துகொண்டு அனைவரும் விசிறியை வைத்து விசிறிக்கொண்டிருந்த வீடியோ சமீபத்தில் வைரலானது. இப்படியும் நடக்குமா என்ற சம்பவத்தை நடக்க வைத்தது Go First. அதே வாரத்தில் விமானத்தில் இருந்து குபுகுபுவென புகை வந்த வீடியோவும் வைரலானது. அந்த வீடியோவுக்கு SpiceJet சொந்தக்காரராக இருந்தது. இப்படி தொடர்ந்து டெக்னிக்கல் பிரச்னையில் சிக்கி வருகின்றன விமானத்தை இயக்கும் நிறுவனங்கள்.  இது ஒருபுறமிருக்க அவசர சிகிச்சைக்கும், அவசர வேலைகளுக்காகவும் விமானத்தை தேடி ஓடி வரும் பயணிகளை அசால்டாக 5 மணி நேரம் காக்க வைப்பதிலும் SpiceJet தற்போது ரெக்கார்ட் படைத்து வருகிறது. அப்படியான ஒரு சம்பவத்தால் இன்று கொல்கத்தா விமான நிலையத்தில் வயதானவர்களும், நோயாளிகளும்,கைக்குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். 




இன்று கொல்கத்தா டூ சென்னை வரும் SpiceJet விமானம் (SG 0626) மாலை 3.30 மணிக்கு கிளம்ப வேண்டியது. எல்லாமும் தயாராக போர்டிங் பாஸ் வரை வேலை முடிந்து விமானத்தில் ஏற பயணிகள் தயாராக இருந்த போது விமானம் தாமதமாகிறது என பொறுப்பற்று சொல்லி இருக்கிறது SpiceJet. தாமதம் என்றால் அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ அல்ல. கிட்டத்தட்ட 5 மணி நேரத்துக்கும் மேல் தாமதம் எனக் கூறியுள்ளனர். அதாவது மாலை 3.30 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் இரவு 8.30க்கு கிளம்பும் என சொல்லியுள்ளனர். பல அவசர தேவைக்காகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் சென்னை செல்ல வேண்டிய வயதானவர்களும், நோயாளிகளும் SpiceJet நிறுவனத்தின் பொறுப்பற்ற விஷயத்தால் விமான நிலையத்திலேயே காத்துக்கிடக்கின்றனர். பொதுவாக விமானம் தாமதம் ஆவதென்றால் முன்னதாகவே பயணிகளுக்கு எஸ் எம் எஸ் அனுப்புவார்கள்.ஆனால் எந்த வித முன் தகவலும் இல்லாமல்கடைசி நேரத்தில் 5 மணி நேர தாமதம் என்பதை SpiceJet எப்படி கூற முடியும்? விமான பயணத்தை திட்டமிட்டு பல வேலைகளையும், முக்கிய மருத்துவ சிகிச்சைகளையும் கணக்கிட்டு பயணிக்க வந்த பயணிகளுக்கு யார் பொறுப்பு என பயணிகள் கோபத்தில் கொந்தளித்துள்ளனர். இதனால் கொல்கத்தா விமான நிலையமே போராட்டக்களமாக காட்சி அளித்தது.


இது தொடர்பாக பயணிகளுக்கு முறையான தங்குமிடம் கூட கொடுக்காத SpiceJet நிறுவனம் விமான நிலையத்திலேயே அவர்களை காத்திருக்க கூறியுள்ளதுதான் உச்சக்கட்ட கொடுமை. இது குறித்து விளக்கம் அளித்து சமாளித்துள்ள SpiceJet, விமான கோளாறு காரணமாகவே தாமதம் என்றும், மாலை 5 மணிக்கு பெங்களூருவில் இருந்து வரும் விமானமே இரவு சென்னைக்கு திரும்ப செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளனர். 




இது குறித்து தெரிவித்துள்ள விமான நிலைய ஊழியர்கள் சிலர், சில நாட்களாகவே SpiceJet விமானங்கள் தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருப்பதாகவும், தாமதமாவது, விமானத்தில்கோளாறு என பல சிக்கல்களை சந்திக்கிறது. SpiceJet தற்போது ஏதோ சிக்கலில் இருப்பதே இது மாதிரியான சொதப்பலே காரணம் என கூறியுள்ளனர். மேலும் தாமதத்துக்கு விமானகோளாறு என்பது உண்மையில்லை என்றும்,வேறு ஏதோ சில சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்






SpiceJet நிறுவனத்தின் இந்த பொறுப்பற்றத்தனம் குறித்து பேசியுள்ள பயணி ஒருவர், விமான நிலையத்தில்காத்திருக்கும் பலர் வயதானவர்கள், நோயாளிகள். அவர்கள் நேரத்துக்கு உண்டு, மருந்து என கடைபிடிப்பவர்கள். அவர்கள் தற்போது 5 மணி நேரம் காத்துக்கிடப்பது என்பது எவ்வளவு கஷ்டம்? இதனை SpiceJet நிறுவனம் புரிந்துகொள்ளவில்லை. SpiceJet இந்த அளவுக்கு அசால்டாக இருப்பது ஏற்கத்தக்கது அல்ல என்றார்.