கிராமங்களில் பசு பாதுகாப்பு கமிட்டிகளை அமைக்கவும், அதன் உறுப்பினர்களுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கவும் உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது. 


பசு பராமரிப்புப் பணி:


இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு 7.12 சதவீதமாக உள்ளது. இதனால், வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அக்னிபாத் திட்டம் இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைப் பெற்றாலும், அக்னிவீர் வாயுத் திட்டத்திற்கு சுமார் 7,49,899 பேர் விண்ணப்பித்திருந்தனர். 3000 பணியிடங்களுக்கு 7.50 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பது நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தை அடைந்திருப்பதையேக் காட்டுகிறது. எந்த வேலையாக இருந்தாலும் செய்ய இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று விமர்சித்திருந்தார். மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க மாநில அரசுகளும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. தொழிற்சாலைகள், ஐடி கம்பெனிகள் மூலம் சில மாநிலங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் வேளையில், உத்தரகாண்ட் தங்கள் பாணியில் பசு மாட்டின் மூலம் வேலை வாய்ப்பை வழங்க முடிவு செய்திருக்கிறது.





பராமரிப்பு நிதி உயர்வு:


உத்தரகாண்ட் விலங்குகள் நலவாரியத்தின் கூட்டம் விலங்குகள் நல அமைச்சர் சவுரப் பகுகுனா தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது, கைவிடப்பட்ட விலங்குகளின் நலனைக் காக்கும் வகையில் அதற்கான ஆண்டு ஒதுக்கீடான 2.5 கோடி ரூபாயில் இருந்து, 15 கோடி ரூபாயாக உயர்த்த மாநில அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து உத்தரகாண்டிலும், பசுக்களுக்கு தீவனம் வழங்க ஒரு நாளைக்கான தொகையையும் உயர்த்தியுள்ளது. ஒரு பசுவிற்கு தீவனத்திற்காக ஒருநாளைக்கு ரூ.6 செலவிடப்பட்ட நிலையில், புதிய உயர்வின் படி ஒரு நாளைக்கு 30 ரூபாய் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்கப் பகுதியாக கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்களை கைவிடப்பட்ட பசுமாடுகள் பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்த உள்ளதாக அமைச்சர் பகுகுனா தெரிவித்துள்ளார். மேலும், பசுக்கள் மற்றும் மற்ற விலங்குகள் கடத்தப்படுவதைத் தடுக்க உத்தரகாண்டில் உள்ள 13 மாவட்டங்களுக்கு தலா 12.5 லட்சம் ரூபாய் வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.




பசு சேவகர்கள்:


திறமையற்ற, படிப்பறிவில்லாத மற்றும் வேலையில்லாத கிராம மக்கள் “பசு சேவகர்களாக” நியமிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு மாதம் 4000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு நபர் குறைந்தபட்சம் 4 அல்லது 5 பசுக்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ஒரு பசுவிற்கு ரூ.900 வீதம் மாதந்தோறும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்படும். அதே சமயம் பசுக்களின் பிரச்சனையும் தீர்க்கப்படும் என்றும் விலங்குகள் நல வாரியத்தின் திட்ட இயக்குநர் அசுதோஷ் ஜோஷி கூறியுள்ளார்.




இளைஞர்களுக்கும் வேலை:


அரசின் திட்டப்படி இந்த திட்டம் சரியாக செயல்படுத்தப்பட்டால், விலங்குகள் நல வாரியத்தின் மற்ற பணிகளை செய்ய இளைஞர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று கூறியுள்ளார். அதாவது, பசுக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இளைஞர்களுக்கு பயிற்சி அழங்கப்படும் என்றும் அதற்காக ஒரு பசுவிற்கு கூடுதலாக 12 ரூபாய் வழங்கப்படும் என்றும் விலங்குகள் நலவாரியத்தில் தற்போது ஆள் பற்றாக்குறை நிலவுவதால் இந்த இளைஞர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள் என்று அசுதோஷ் ஜோஷி கூறியுள்ளார்.