சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில்(OTA) பயிற்சி நிறைவு செய்து 178 அதிகாரிகள் அணிவகுப்பில் ஈடுபட்டனர். இதில், மூன்றாடுக்கு முன்பு, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் கணவனை இழந்த ஜோதி நைன்வால் என்பவர் தற்போது ராணுவ அதிகாரியாக பயிற்சி பெற்றுள்ளார். 


எல்லையில் இந்திய வீரர்கள் சுயநலம் இல்லாத அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு இந்திய மகர் படைப்பிரிவில் பணியாற்றி வந்த  தீபக் நைன்வால் ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாகிச் சூட்டில் கொல்லப்பட்டார். இந்நிலையில், இவரின் இணையார் ஜோதி நைன்வால் தற்போது இந்திய ராணுவத்தில் லெஃப்டினெண்டாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.   


எல்லையில் தனது கணவரை இழந்த நிலையில், சற்றும் மனம் தளராமல்  மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய குறுகியகால சேவை ஆணையம் (Short Service Commission (SSC) எழுத்துத் தேர்வில் கலந்து கொண்டார். உடல் தகுதித் தேர்வு, திறனறிதல் சோதனை, தனிமனித ஒழுக்கம், குழுப் பயிற்சி மற்றும் நேர்காணல் தேர்வு என அனைத்திலும் தேர்வாகி  சென்னை இராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கழகத்தின் பயிற்சிக்குத் தேர்வானார். 11 மாத கடின பயிற்சிக்குப் பின் தனது  லெஃப்டினெண்டாக பணியமர்த்தப்பட்டுள்ளார். 


தனது இந்த வெற்றிக்கு மகர் படைப்பிரிவுக்கும் முக்கிய பங்குண்டு என்று குறிப்பிட்ட அவர், " மகர் படைப்பிரிவில் எனது கணவனுடன் பணியாற்றிய ஒவ்வொரு அதிகாரிகளும் இடைவிடாது ஊக்கம் அளித்து வந்தனர். குடும்பத்தின் முதல் ராணுவ அதிகாரி என்பதால் சவால்களை சந்திக்க தயராக இருப்பதாகவும் தெரிவித்தார். ஜோதி- தீபக் தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.         






ராணுவ துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சிபி மொகந்தி, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, பயிற்சியின்போது சிறப்பாக செயல்பட்ட ராணுவ வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். சிறந்த அணிவகுப்பு மரியாதையை வழங்கிய வீரர்களைப் பாராட்டிய படைத்தலைவர், சுயநலம் இல்லாத அர்ப்பணிப்புடனான நிபுணத்துவம் வாய்ந்த தங்களது சேவையின் மூலம் நாட்டிற்கும் தாங்கள் பயிற்சி பெற்ற மையத்திற்கும் பெருமை சேர்க்குமாறு அதிகாரிகளைக்  கேட்டுக் கொண்டார்.


முன்னதாக, தேசிய பாதுகாப்பு படை (CDS) அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வில் (II), பெண்களையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. 


மேலும், ராணுவத்தில் பெண் அதிகாரிகள் குறுகிய காலப் பணியில் (Short service commission)  சுமார் 20 ஆண்டுகள் வரை பணியாற்றி வந்தனர். தங்களை ஆண் அதிகாரிகள் போல் ஓய்வு பெறும் வயது வரை நீண்ட கால பணியில் ( Permanent Commission ) இருக்க அனுமதிக்க உத்தரவிடும்படி உச்சநீதிமன்றத்தில் பெண் அதிகாரிகள் சிலர் வழக்கு தொடுத்தனர். இதையடுத்து பெண் அதிகாரிகளையும், ஆண் அதிகாரிகளுக்கு இணையாக நீண்ட கால பணியில் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் முன்னதாக உத்தரவை பிறப்பித்தது.