சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற டபுள் டெக்கர் ரயில், விசாநத்தம் ரயில் நிலையத்தில் தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பங்காரப்பேட்டையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள விசாநத்தம் ரயில் நிலையத்தில் காலை 11:30 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தடம் புரண்ட டபுள் டெக்கர் ரயில்:
தகவல் தெரியவந்ததை தொடர்ந்து, பெங்களூரு கோட்டத்தின் மூத்த அதிகாரிகள் விபத்து நிவாரண ரயிலுடன் (ART) சம்பவ இடத்திற்கு சென்றனர். பொதுமேலாளர் ஸ்ரீ சஞ்சீவ் கிஷோர் மற்றும் தென் மேற்கு ரயில்வே மண்டல பிரிவின் மூத்த அதிகாரிகள் ஹூப்பள்ளியில் உள்ள பேரிடர் மேலாண்மை பிரிவில் இருந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மெயில்-எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலின் முன் பகுதி, அதாவது ரயிலின் பாதிக்கப்படாத பகுதி அனைத்து பயணிகளுடன் பங்காரப்பேட்டைக்கு புறப்பட்டது. தடம் புரண்ட பெட்டியின் பயணிகள் வேறு பெட்டிக்கு மாற்றப்பட்டு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பயணிகளின் நிலை என்ன?
பயணிகள்/பொதுமக்களின் வசதிக்காக கே.எஸ்.ஆர் பெங்களூரு, பெங்களூரு கேன்ட் மற்றும் பங்காரப்பேட்டை நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7.25 மணிக்கு டபுள் டெக்கர் ரயில்(22625) பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையம் புறப்பட்டுச் சென்றது. காலை 11.15 மணியளவில் பங்காருபேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் இருந்து ரயிலின் பெட்டி புரண்டதை தொடர்ந்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.
தொடரும் சம்பவங்கள்:
ரயில்கள், தடம் புரண்டு விபத்துக்குள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, சமீப காலமாக, இம்மாதிரியான சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், மேற்கு வங்க மாநிலம் பர்தமான் மாவட்டத்தில் பயணிகள் ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
மேற்கு வங்க பர்தமான் பகுதியில் இருந்து பந்தல் வரை செல்லும் பயணிகள் ரயில், சக்திகர் ரயில் நிலையம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக தடம் புரண்டது. ரயில் தடம் புரண்ட தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த மீட்பு படையினர் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட இரண்டு பெட்டிகளில் சிக்கித் தவித்த பயணிகளை பத்திரமாக கீழே இறக்கினர்.
மேலும், விபத்துக்கான காரணம் மற்றும் உயிர் சேதம் குறித்த தகவல்கள் கிடைக்காத நிலையில், விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதேபோல, கடந்த மாதம், தூத்துக்குடியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஓசூர் அடுத்த ராயக்கோட்டை ரயில் நிலையம் அருகே எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.