அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் தவாங் பகுதியில் இந்திய ராணுவத்தின் சீட்டா ரக விமானம் ஒன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து நியாம் ஜங் சூ என்ற பகுதியில் இருக்கும் நீர்வீழ்ச்சிக்கு அருகே நடைபெற்றதாக கூறப்படுகிறது. இரண்டு விமானிகளுடன் ராணுவத்தின் சீட்டா விமானம் சுர்வா சம்பா பகுதியில் வந்துள்ளது. வழக்கமான ரோந்து பணியில் இந்த விமானம் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து இரண்டு விமானிகளும் ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
அதில் ஒரு விமானி மிகவும் ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு விமானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மிக் 21 ரக விமானத்தில் ஏற்பட்ட விபத்து சிக்கி முப்படைகளில் தளபதி பிபின் ராவத் மரணம் அடைந்தார். அந்த மரணத்திற்கு பிறகு பாதுகாப்பு படையின் விமான விபத்துகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு பாதுகாப்புப் படையின் விமான விபத்து ஏற்படுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் பேருந்து விபத்து.. 25 பேர் பலி:
உத்தரக்காண்ட் பகுதியில் மலைப் பகுதிகளில் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவது வழக்கம். அந்தவகையில் நேற்று இரவு 50 பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. உத்தரக்காண்ட் மாநிலத்தின் பவுரி கர்வால் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக பள்ளத்திற்குள் விழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது வரை இந்த விபத்தில் சிக்கி 25 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உத்தரக்காண்ட் டிஜிபி அசோக் குமார், “பவுரி கர்வால் பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தற்போது வரை 21 பேரை மீட்டுள்ளனர். அத்துடன் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.