உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் டாட்டூ குத்திய இருவருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, குறைந்த விலையில் சுதாதாரமற்ற டாட்டூ பார்லர்களில் டாட்டூ குத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனையின் மருத்துவர் ப்ரீத்தி அகர்வால் இதுகுறித்து கூறுகையில், "கவனமாக பரிசோதனை மற்றும் ஆலோசனைக்குப் பிறகு, பச்சை குத்தியதைத் தொடர்ந்து ஒரு சிலருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக, உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.
பாரகானைச் சேர்ந்த 20 வயது ஆண், நக்மாவைச் சேர்ந்த 25 வயது பெண் உள்பட 14 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். அவர்களுக்கு என்ன பிரச்னை என தெரிந்து கொள்ள வைரஸ், டைபாய்டு, மலேரியா உள்பட பல சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. காய்ச்சல் குறையாத நிலையில், எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்வாய்ப்பட்ட அனைவருக்கும் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
விவரங்களை ஆய்வு செய்த பிறகு, எச்.ஐ.வி நோயாளிகள் எவருக்கும் பாலியல் ரீதியாகவோ அல்லது பாதிக்கப்பட்ட ரத்தத்தின் மூலமாகவோ நோய்த்தொற்று ஏற்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. அனைத்து நோயாளிகளுக்கும் இடையே பொதுவான ஒரு விஷயம் என்னவென்றால், அவர்கள் அனைவரும் சமீபத்தில் பச்சை குத்திக்கொண்டனர் என்பதுதான்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட அனைவரும் ஒரே ஊசியைப் பயன்படுத்திய ஒரே நபரிடம் பச்சை குத்தியிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து விரிவாக பேசிய டாக்டர் அகர்வால், "டாட்டூ ஊசிகள் விலை உயர்ந்தவை. எனவே டாட்டூ கலைஞர்கள் பணத்தை மிச்சப்படுத்த அதே ஊசிகளைப் பயன்படுத்துகிறார்கள். பச்சை குத்திக்கொள்வதற்கு முன்பு ஊசி புத்தம் புதியதா என்பதை எப்போதும் சரிபார்க்கும்படி அறிவுறுத்துகிறேன்" என்றார்.
உடலில் பச்சை குத்தி கொள்வது என்பது சமீபத்திய நிகழ்வு அல்ல. பச்சை குத்திக்கொள்வது, உடலை குத்திக்கொள்வது இளம் வயதினர் மற்றும் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்வு தொடர்ந்து வளர்ந்து வருவதால், உடல் கலையுடன் தொடர்புடைய அபாயங்கள் பற்றிய கேள்வியை பலர் எழுப்பியுள்ளனர்.
பச்சை குத்திக்கொள்வது, உடலில் பல்வேறு இடங்களில் குத்திக்கொள்வது இரண்டும் ஊசிகளுடன் தொடர்புடையவை என்பதைக் கருத்தில் கொண்டு, இதனால் பரவக்கூடிய நோய் தாக்கப்படலாம் என்பதை மறுக்க முடியாது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்