தன் மகளைத் தோளில் தூக்கி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற நபரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து சத்திஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ்.சிங் தியோ விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். 


`நான் அந்த வீடியோவைப் பார்த்தேன்.. அது மனதை உலுக்குகிறது.. தங்கள் பணிகளை மேற்கொள்ளாதவர்களைப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளேன்’ எனக் கூறியுள்ளார் அமைச்சர் சிங் தியோ. அப்பகுதியின் மருத்துவ அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 


ஈஸ்வர் தாஸ் என்பவர் சத்திஸ்கரின் லகன்பூர் பகுதியில் இருந்து அம்தாலா கிராமத்திற்குத் தன் மகள் சுரேகாவின் உயிரற்ற உடலைச் சுமந்து செய்துள்ளார். 



ஈஸ்வர் தாஸ்


லகன்பூர் கிராமத்தில் இருந்த மருத்துவ மையத்தில் ஈஸ்வர் தாஸ் தன் மகளை அனுமதித்த போது மருத்துவர் வினோத் பார்கவ் சிறுமிக்கு காய்ச்சல் அதிகரித்திருப்பதாகவும், அவர் உயிர் பிழைப்பது கடினம் எனக் கூறியுள்ளார். மறுநாள் காலையில் சிறுமி உயிரிழந்தவுடன். அவரின் தந்தை ஈஸ்வர் தாஸ் வேன் ஒன்றைக் கோரியுள்ளார். பல மணி நேரங்கள் தாமதம் ஏற்பட்டதால் அவரே தன் மகளை சுமந்து சென்றுள்ளார். 






மருத்துவர் தரப்பில், வேன் காலை 9.20 மணிக்கு வந்தடைந்ததாகவும், ஈஸ்வர் தாஸ் அதற்கு முன்பே சிறுமியை சுமந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், ஈஸ்வர் தாஸ் தன் மகள் எதுவும் சாப்பிடவில்லை எனவும், அப்போதும் ஊசி செலுத்தப்பட்டதே அவரது மரணத்திற்குக் காரணம் எனக் கூறியுள்ளார். 


இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதற்குப் பிறகு, அதே பகுதி இடம்பெற்றிருக்கும் அம்பிகாபூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், மாநில சுகாதாரத்துறை அமைச்சரான டி.எஸ்.சிங் தியோ இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். 



 டி.எஸ்.சிங் தியோ


செய்தியாளர்களிடம் பேசிய அவர், `இந்த விவகாரத்தில் தலைமை மருத்துவ அதிகாரிக்கு விசாரணை நடத்துவதற்காக உத்தரவிடப்பட்டுள்ளது. மறைந்த சிறுமி மருத்துவமனைக்கு வந்த போதே, அவரது உடல்நிலை மோசமாக இருந்ததோடு, அவரது மூக்கில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அதிகாரிகள் உடலை சுமந்து செல்லும் வேன் வருவது வரை, பாதிக்கப்பட்டவருடன் நின்றிருக்க வேண்டும். அல்லது உதவி செய்திருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார். 


அப்பகுதியின் மருத்துவ அதிகாரி மருத்துவர் கெர்கெட்டா தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதோடு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.