ஒடிஷா மாநிலத்தில் தெருநாய்கள் துரத்தியதால் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் காரின் மீது மோதி, நேர்ந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


விபத்தின் சிசிடிவி காட்சிகள்:


ஒடிஷா மாநிலத்தின் பெர்ஹாம்பூர் பகுதியில் தெருநாய்களால் நடந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் காண்போரை அச்சமடைய செய்துள்ளது. அதன்படி, “ சிறுவன் ஒருவனுடன் இரண்டு பெண்கள் ஸ்கூட்டரில் செல்ல, அப்பகுதியில் இருந்த 5 தெருநாய்கள் அந்த வாகனத்தை பின் குரைத்துக்கொண்டே துரத்தியுள்ளன. இதனால், நாய்களிடமிருந்து தப்பிப்பதற்காக ஸ்கூட்டரின் வேகத்தை அந்த பெண் அதிகரித்துள்ளார். ஒரு கட்டத்தில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றிருந்த காரின் மீது அதிவேகமாக மோதியுள்ளது. இதனால், ஸ்கூட்டரில் இருந்த ஒரு சிறுவன் உட்பட மூன்று பேரும் காற்றில் பறந்து கீழு விழுந்தனர். இதனிடையே, தெரு நாய் ஒன்று ஸ்கூட்டருக்கு அடியில் சிக்கிக் கொண்டது. வாகனம் கவிழ்ந்ததும் தெரு நாய்கள் அங்கிருந்து ஓட, சிறுவன் பயத்தில் கதறி அழுதுள்ளான். விபத்தில் இரண்டு பெண்களுக்கு உடலின் பல பகுதிகளிலும் காயம் ஏற்பட்டு வலியால் துடித்துள்ளனர்” இந்த காட்சிகள் அனைத்து இணையத்தில் வைரலாகியுள்ளன.






பொதுமக்கள் கோரிக்கை:


விபத்து தொடர்பான வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ள அப்பகுதி மக்கள், தங்கள் பகுதியில் அதிகரித்துள்ள தெருநாய்கள் பிரச்னைக்கு உடனடியாக அரசு தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


காயமடைந்தவர்கள் யார்:


இதனிடையே, விபத்தில் காயமடைந்தவர்கள் சுப்ரியா, சஸ்மிதா மற்றும் அவரது மகன் என்பது தெரிய வந்துள்ளது. காயமடைந்த அவர்கள் உடனடியாக தங்கள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் விரைந்து வந்து 3 பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த விபத்து குறித்து பேசிய சுப்ரியா ”நாங்கள் காலை 6 மணியளவில் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​தெருநாய்கள் கூட்டம் எங்களைத் துரத்த ஆரம்பித்தன. அப்போதுதான், ஸ்கூட்டரின் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்தேன்”  என்றார். அதைதொடர்ந்து பேசிய சஸ்மிதா “ சாலையோரம் நின்று இருந்த காரின் மீது மோதியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மின் கம்பத்திலோ அல்லது வேறு பொருளிலோ மோதி இருந்தாலோ அல்லது சாக்கடையில் விழுந்து இருந்தாலோ  உயிரிழந்து இருப்போம்” என தெரிவித்தார். அதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, தெருநாய்கள் பிரச்னைக்கு அரசு தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.