சீக்கியர் ஒருவர் மீது செருப்பை வீசியதாக மத்திய இணை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுகந்தா மஜும்தார் மீது மேற்குவங்க காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக, செருப்பு வீசப்படவில்லை என்றும் பேப்பர் கட்டிங்தான் வீசப்பட்டதாகவும் புது விளக்கம் அளித்துள்ளது.
சீக்கியர் மீது செருப்பை வீசினாரா மத்திய அமைச்சர்?
கடந்த ஜூன் 12ஆம் தேதி, மேற்குவங்க மாநில பாஜக தலைவரும் மத்திய கல்வித்துறை இணை அமைச்சருமான மஜும்தார், சீக்கியர் மீது செருப்பை வீசியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம், மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இல்லத்திற்கு அருகில் ஹஸ்ரா சாலை ஹரிஷ் சாட்டர்ஜி தெருவில் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, கடந்த ஜூன் 13ஆம் தேதி, தெற்கு கொல்கத்தாவில் உள்ள காளிகாட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையின் நகலை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
பாஜக கொடுத்த புது விளக்கம்:
புகார் அளித்த சீக்கியர், மஜும்தார் இதை வேண்டுமென்றே செய்த செயல் என்றும், மத நம்பிக்கையை அவமதித்து, மத உணர்வைப் புண்படுத்தியதாகவும், தன்னை அவர் தாக்கியதாகவும் குற்றம் சாட்டினார். பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 302 (தனிநபர்களின் மத உணர்வுகளுக்கு தீங்கு விளைவிப்பது) மற்றும் 115(2) (தானாக முன்வந்து காயப்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
மம்தாவின் சம்பவம்:
இந்த விவகாரத்தில் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தங்களின் குரல் புறக்கணிக்கப்பட்டால் பரவலான போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் எச்சரித்துள்ளது.
குற்றச்சாட்டுகளை மறுத்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சமிக் பட்டாச்சார்யா, "ஒரு கட்டுக்கதையை பரப்புவதன் மூலம் சீக்கிய மக்கள் அவமதிக்கப்படுகிறார்கள். மஜும்தார் மற்றும் எங்களைப் போன்றவர்கள், குரு தேக் பகதூர் மற்றும் குரு கோபிந்த் சிங்கின் தியாகங்களைப் பற்றி கற்றுக்கொண்டு வளர்ந்தோம்.