மோசமான வானிலை காரணமாக உத்தரகண்ட் அரசு கேதார்நாத் புனித யாத்திரைக்கான பதிவு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. உத்தரகண்ட் மாநிலம் முழுவதும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கேதார்நாத்துக்கான ஹெலிகாப்டர் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மே 3 ஆம் தேதிக்குப் பின்னர் மழை படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக உத்தரகண்ட் போலீஸ் டிஜிபி அசோக் குமார் கூறுகையில், கேதார்நாத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மே 3 வரை யாத்திரிகர்கள் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. மூச்சுப் பிரச்சனைகள் உள்ள யாத்ரீகர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். 11 ஆயிரம் அடி உயரத்துக்குச் செல்வது என்றால் சாதாரணமான விஷயமல்ல என்றார்.
இடி மின்னலுடன் கனமழை
ருத்ரபிரயாக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஷாகா அசோக படானே கூறுகையில், கேதார்நாத்தில் பனிப்பொலிவு அதிகரித்துள்ளதாலும், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளதால் இன்றைய யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே யாத்திரையைத் தொடங்கியவர்கள் அருகில் பத்திரமான இடங்களில் தங்கிக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார்.
இதற்கிடையில் டிஜிபி அசோக் குமார் நேரில் ஆய்வு செய்தார். எந்தப் பயணிக்கும் எவ்வித அசவுகரியமும் ஏற்படக்கூடாது என்பதை அனைவருக்கும் அறிவுறுத்தினார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, உத்தர்காண்டில் பல இடங்களில் பனிப் பொலிவுக்கு வாய்ப்புள்ளது. பலத்த காற்று, ஆலங்கட்டி மழை பெய்யும். இடி மின்னலுடன் கனமழை பெய்யும். குளிர்நிலை சப் ஜீரோ அளவில் இருக்கும். ருத்ரபிரயாக், உத்தர்காசி, சமோலி, பாகேஸ்வர், பித்ரோகர் மாவட்டங்களில் கடும் குளிர் நிலவும் என்று தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே கடந்த மாதம் 30 ஆம் தேதியன்று கனமழை, பனிப்பொலிவு காரணமாக யாத்திரை ஒரு நாள் தடைபட்டது. பின்னர் வானிலை சீரானவுடன் மீண்டும் யாத்திரை தொடங்கியது.
வானிலையும் விதவிதமான அலர்ட்டுகளும்:
கனமழை தொடர்பாகவும் அது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கணக்கிட்டும் அந்ததந்த பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கும். அந்த வகையில் ரெட் அலர்ட், ஆம்பர் அலர்ட், யெல்லோ அலர்ட், க்ரீன் அலர்ட் என 4 வித எச்சரிக்கைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதில்,வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என கணக்கிடப்படுவது ரெட் அலர்ட் என அறிவிக்கப்படுகிறது. இந்த அலர்ட் விடுக்கும்போது, மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய வேண்டும், மின் இணைப்பு, சாலை வசதிகள் துண்டிக்கப்படும் அளவுக்கு மழை பெய்யும் போதே இந்த ரெட் அலெர்ட் விடுக்கப்படும்.
அடுத்ததாக ஆம்பர் அலர்ட் முறை கணக்கிடப்படுகிறது. இந்த எச்சரிக்கையின்போது வானிலை மோசமடைய அதிக வாய்ப்புள்ளதாகவும், சாலை, மின் இணைப்பு சில இடங்களில் துண்டிக்கப்படும் எனவும் இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது.
இதேபோல், அடுத்த சில நாட்களில் வானிலை மோசமாக வாய்ப்பு உள்ளது என்பதை எச்சரிக்கும் வகையில் யெல்லோ அலர்ட் விடுக்கப்படும். இந்த அறிவிப்பின்போது, அந்ததந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படும். அடுத்த சில நாட்களில் வானிலையில் சாதகமற்ற நிலை உருவாக வாய்ப்புள்ளது என்பதை குறிக்கும் வகையில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்படுகிறது.
ஒருவேளை வானிலை ரீதியாக எந்த எச்சரிக்கையும் கிடையாது என்பதை விளக்கும் அறிவிப்பு க்ரீன் அலர்ட் ஆகும். ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.இப்போது உத்தரகண்ட் மாநிலத்தில் விடுக்கப்பட்டுள்ளது ஆரஞ்சு அலர்ட்.