பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியின் சரண்ஜித் சிங் சன்னி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். முதலமைச்சராக இருந்த கேப்டன் அம்ரிந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய முதலமைச்சராக சரண்ஜித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த முதலமைச்சராக அக்கட்சியின் சுனில் ஜக்கார் தேர்வு செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சரண்ஜித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அம்ரிந்தர் அமைச்சரவையில் கேபினெட் அமைச்சராகப் பொறுப்பு வ்கித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையே பஞ்சாப் மாநிலத்தில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. புதிய முதல்வர் தேர்ந்தேடுப்பதில்,  சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஒருமித்தக் கருத்து எட்டப்படாத காரணத்தினால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்துதான் தற்போது மீண்டும் கூட்டம் கூட்டப்பட்டு புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.      


முன்னதாக, நேற்று மாலை 5 மணிக்கு, பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் அவசரக் கூட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டியது. இந்தக் கூட்டத்திற்கு முன்பாகவே  அம்ரிந்தர் சிங், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பதவி விலகல் கடிதத்தை  ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித்திடம் அளித்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், " நான் தொடர்ச்சியாக அவனமானங்களை சந்தித்து வருகிறேன். மூன்றாவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இரண்டு முறை டெல்லியிலும், தற்போது பஞ்சாபிலும். தங்களின் நம்பிக்கைகு உகந்தவர்களை மேலிடம் தேர்வு செய்யட்டும்" என்று தெரிவித்தார். 






சித்து நியமனம்: பஞ்சாப் மாநில அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சித்து, முதல்வருடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக கடந்த 2019-ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் சித்துவை பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித்  தலைவராக காங்கிரஸ் மேலிடம் நிர்ணயித்தது.


 


இதற்கு, கேப்டன் அம்ரிந்தர் சிங் அப்போதே கடும் கண்டனத்தை பதிவு செய்தார். இதுகுறித்து டெல்லி மேலிடத்துக்கு அவர் எழுதிய கடிதத்தில், "சித்துவின் நியமனம் கட்சியின் மூத்த தலைவர்களை நிச்சயம் காயப்படுத்தும். தற்போதைய மாநிலத் தலைவரான சுனில் ஜாகர் இந்து சமயத்தைச் சேர்ந்தவர். அவருக்கு பதிலாக ஜாட் சீக்கியரை (நவ்ஜோத் சித்து) நியமிப்பது இந்து சமூகத்தினரை வருத்தப்படுத்தும். மாநிலளவில் இரண்டு ஜாட் சீக்கியர்கள் தலைமை வகிப்பது (கட்சித் தலைவர் மற்றும் முதல்வர் ) அதிகார சமமின்மையை காட்டுகிறது" என்று தெரிவித்திருந்தார்.