காவிரி விவகாரத்தில் விசாரணை நடத்த இன்றே புதிய அமர்வு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காவிரி நீரை கர்நாடக அரசு முறையாக அளிக்கவில்லை என்றுகூறி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஆக. 14ஆம் தேதி மனுத் தாக்கல் செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு அறிவித்துள்ளது. 


காவிரியில் கூடுதல் நீர் திறந்துவிடக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் விரைவாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முறையீடு செய்தார். இதை ஏற்ற தலைமை நீதிபதி, காவிரி வழக்கை விசாரிக்க இன்றே புதிய அமர்வு உருவாக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இந்த அமர்வில் 3 நீதிபதிகள் இருப்பர்.
 
காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டது.   


என்ன பிரச்சினை?


காவிரி நீரைப் பங்கீடு செய்வதில், கர்நாடக அரசுக்கும் தமிழக அரசுக்கும் நீண்ட ஆண்டுகளாக முரண் நிலவி வருகிறது. இதற்கிடையே இந்த ஆண்டுஜூன் முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து 53.77 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பருவமழை தாமதம் காரணமாக கர்நாடகா 15.79 டி.எம்.சி. தண்ணீர்தான் வழங்கியுள்ளதாக தெரிகிறது. இதன்படி 37.97 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தரவில்லை.


தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு


இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நிலுவையில் உள்ள 37.9 டிஎம்சி நீரை திறந்துவிடக் கோரி தமிழ்நாடு கோரிக்கை விடுத்தது. இதை கர்நாடகா ஏற்க மறுத்ததால் தமிழ்நாடு நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். 


இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரியில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் உத்தரவிட்டார். ஆனால், கர்நாடகாவில் கடும் வறட்சியை சந்தித்து வருவதாகவும்,  தண்ணீர் திறப்பு குறித்து மத்திய அரசு அதிகாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்திருந்தார்.


3 நீதிபதிகள் அடங்கிய புது அமர்வு


அதே நிலையில் காவிரி நீரை கர்நாடக அரசு முறையாக அளிக்கவில்லை என்றுகூறி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஆக. 14ஆம் தேதி மனுத் தாக்கல் செய்தது. இதை விசாரித்த  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், காவிரி விவகாரத்தில் விசாரணை நடத்த புதிய அமர்வு அமைக்கப்படும் என்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 3 நீதிபதிகள் தலைமையில் இன்றே புது அமர்வு உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.