ரஷ்யா சார்பில் நிலவுக்கு அனுப்பப்பட்ட லூனா 25 விண்கலம், இந்தியாவின் சந்திரயான் 2-ஐப் போல கடைசிக் கட்டத்தில் தோல்வியைத் தழுவி, நிலவிலேயே விழுந்து நொறுங்கியுள்ளது.
சந்திரயான் 2
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்- 2 கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 48 நாட்கள் பயணத்துக்குப் பின் நவம்பர் 7-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான்-2 வெற்றிகரமாக நுழைந்தது, புவி நீள்வட்டப் பாதைக்குள்ளும் வெற்றிகரமாக நுழைந்தது.
நிலவின் தென்துருவத்தில் உள்ள மான்சினஸ் சி மற்றும் சிம்பிலியஸ் எஸ் எனும் இரு பள்ளங்களுக்கு இடையே விக்ரம் லேண்டர் கருவியைத் தரையிறக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. திடீரென விக்ரம் லேண்டர் கருவியின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் அந்தக் கருவியைத் தொடர்புகொள்ள இஸ்ரோ சார்பில் பலமுறை முயற்சி செய்தது. எனினும் அது சாத்தியமாகவில்லை.
தோல்விக்கு என்ன காரணம்?
தரையிறங்கும்போது லேண்டரில் இருந்த 5 இன்ஜின்கள் உருவாக்கிய அதீத உந்து திறன், பிழைகளைக் கண்டறிவதில் மென் பொருளுக்கு இருந்த கட்டுப்பாடுகள், சிறிய அளவிலான தரையிறங்கும் பகுதி ஆகிய காரணங்களால், லேண்டரும் உள்ளே இருந்த ரோவரும் வெடித்துச் சிதறின. ஆர்பிட்டர் மட்டும் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், சந்திரயான் 2-ஐப் போலவே லூனா 25 விண்கலமும் கடைசிக் கட்டத்தில் தோல்வியைத் தழுவி, நிலவிலேயே விழுந்து நொறுங்கியுள்ளது.
அசாத்திய வேகம் காட்டிய லூனா 25
அறிவியலில் பெருமளவு முன்னேறிய நாடானா ரஷ்யா, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா 25 என்னும் விண்கலத்தை ஆகஸ்ட் 11-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. நிலவில் இருக்கும் நீர்த்தேக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காகவும் லூனா 25 விண்ணுக்கு அனுப்பப்பட்டது. மாஸ்கோவிற்கு கிழக்கே 3,450 மைல்கள் (5,550 கிமீ) தொலைவில் அமைந்துள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து, சோயுஸ் 2.1 வி ராக்கெட் லூனா-25 விண்கலத்தை விண்ணில் ஏவியது.
வெற்றிகரமாகப் பயணத்தை மேற்கொண்ட லூனா 25 விண்கலம், நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. இதனைத் தொடர்ந்து அதன் சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடைபெற்றன. ஆனால் திடீரென விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறுதிக் கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால், இறுதி சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்ப முடியாமல், பழைய பாதையிலேயே லூனா 25 விண்கலம் சுற்றி வந்தது. தொடர்ந்து ஆக.19ஆம் தேதி லூனா தொடர்பை இழந்ததாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக ஆகஸ்ட் 19ஆம் தேதி மாஸ்கோ நேரப்படி, 14.57க்கு லூனா 25 தொடர்புக் கட்டுப்பாட்டை இழந்தது. ஆக.19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்றது. தொடர்பை உருவாக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
திட்டமிட்ட அளவுருக்களில் இருந்து மாறுதல் ஏற்பட்டதை அடுத்து, திட்டமிடப்படாத சுற்றுப்பாதையில் (off-design orbit) நுழைந்தது. இதனால் சந்திரனின் மேற்பரப்பில் மோதி லூனா செயலிழந்தது. லூனா 25 இன்று (ஆக.21) தென் துருவத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென செயலிழந்தது.
என்ன ஒற்றுமை?
* சந்திரயான் 2, லூனா 25 ஆகிய இரண்டு விண்கலங்களுமே நிலவில் தரை இறங்குவதற்கு முன்பாக கடைசிக் கட்டத்தில் விழுந்து நொறுங்கி உள்ளன.
* இந்த இரண்டு விண்கலங்களுமே நிலவின் தென் துருவத்தை ஆய்வு மேற்கொள்ள அனுப்பப்பட்டவை ஆகும்.