பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், வரும் ஜூலை 13ஆம் தேதி, இந்திய நேரப்படி மதியம் 2:30 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை, இஸ்ரோ உறுதி செய்துள்ளது. நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான்-3, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சந்திரயான் திட்டம்:


இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்ய 2008-ல் சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது. இதையடுத்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான் -2 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக நவீன வசதிகளுடன் சந்திரயான் -2 விண்கலம் உருவாக்கப்பட்டது.


சந்திரயான் – 2 ஜூலை மாதம் 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் – 2 ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஏவுகணை மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான் – 2 இருக்கும் லேண்டர் சரியாக தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் சந்திரயான்-3 திட்டத்தை சுமார் ரூ.615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது.


இந்த முறை எந்த தொழில்நுட்பக் கோளாறும் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதற்காக ஏற்கனவே இரண்டு முறை சோதனை ஓட்டம் செய்யப்பட்டுள்ளது.


சந்திரயான் 3 சோதனை ஓட்டம்:


சந்திரயான்-3 இன்டர்பிளானட்டரி மிஷன் மூன்று முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது: propulsion, லேண்டர் மற்றும் ரோவர். அதாவது புரபுல்சன் பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ தொலைவுக்கு கொண்டு செல்லும். லேண்டர் பகுதி நிலவில் தரையிறங்கும் பகுதியாகும், ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ- அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டுள்ளது.


சந்திரயான் -3 ஏவுகணையின் பொருத்தப்பட உள்ள சி.இ.20 க்ரையோஜெனிக் எஞ்சினின் சோதனை  அதாவது இரண்டாம் கட்ட சோதனை வெற்றிகரமாக பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. மகேந்திரகிரியின் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இச்சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






இந்நிலையில் இன்று ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கு ஏவுதளத்தில் சந்திரயான் 3 விண்கலம் lvm3 உடன் இணைக்கப்பட்டது. சந்திரயான் 3 விண்ணில் ஏவ இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.