நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. 40 நாட்களில் பல ஆயிரம் கிலோமீட்டர்களை கடந்து திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி தரையிறங்கியது சந்திரயான் 3 விண்கலம்.


இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை தொடர்ந்து இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. அதேநேரம், நிலவின் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமை இந்தியா பெற்றுள்ளது. 


நிலவில் தரையிறங்கிய பின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் கால்தடம் பதித்தது. பின் பிரக்யான் ரோவர் நிலவில் மூன் வாக் செய்யும் காட்சிகளை இஸ்ரோ வெளியிட்டது.  தற்போது பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. நிலவு தொடர்பாக இதுவரை அறியப்படாத பல்வேறு தகவல்களை சந்திரயான் 3 வழங்கும் என்பதோடு, சந்திரனின் மிகவும் மதிப்புமிக்க வளங்களில் ஒன்றான நீர் பனி பற்றிய ஏராளமான தகவல்கள் தென் துருவத்தில் இருந்து கிடைக்கப்பெறலாம் என்பதே இத்திட்டத்தின் மீதான மிகப்பெரிய எதிர்பார்ப்பாகும்.






கடந்த சில தினங்களுக்கு முன் சந்திரயான் 3 மூன்று இலக்குகளை கொண்டு பயணம் செய்ததாகவும், அதில் இரண்டு இலக்குகள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாகவும் மூன்றாவது இலக்குக்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தது. இப்படி படிப்படியாக சந்திரயான் 3 விண்கலம் தனது அய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நேற்று நிலவை பற்றிய சில முக்கிய தகவல்களை பிரக்யான் ரோவர் வழங்கியுள்ளது.


முக்கியமாக நிலவின் தெந்துருவத்தில் மேற்பரப்பில் சில கனிமங்கள் இருப்பதாக உறுதி செய்துள்ளது. அதாவது, நிலவில்  சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான், ஆக்ஸிஜன் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் கருவி கண்டுபிடித்திருக்கிறது.இதுவரை எந்த நாடும் நிலவில் சல்பர் இருப்பதை உறுதிபடுத்தவில்லை. அடுத்தக்கட்டமாக  நிலவில் ஹைட்ரஜன் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தும் பணியில் ரோவர் இறங்கியுள்ளது. முக்கியமாக ஹைட்ரஜன் இருந்தால் நீர் இருப்பதற்கான சாத்தியகூறுகள் அதிகமாக இருக்கும்.


ஏனெனில், ஹைட்ரஜன் 2 பகுதியும் ஆக்ஸிஜன் ஒரு பகுதியும் இணைந்தது தான் நீர். அதேபோல உலகில் மிக அரிதாக கிடைக்கும் கனிமங்களில் ஒன்று சல்பர், பூமியில் வெறும் 0.63 சதவிகிதம் மட்டுமே இருக்கக்கூடிய தனிமம் இது. இதை கொண்டுதான் விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகள் உருவாக்கப்படுகின்றன. தற்போது பிரக்யான் ரோவர் அதனை கண்டு பிடித்திருப்பது நிலவின் தெந்துருவத்தில் என்ன இருக்கிறது என்ற ஆர்வத்தை உலக நாடுகள் மத்தியில் இது தூண்டியுள்ளது.