நிலவின் தென் திருவத்தை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட சதிரயான் - 3 வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான் திட்டம்:
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்ய 2008-ல் சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது. இதையடுத்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான் -2 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக நவீன வசதிகளுடன் சந்திரயான் -2 விண்கலம் உருவாக்கப்பட்டது.
சந்திரயான் – 2 ஜூலை மாதம் 2019 ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் – 2 ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஏவுகணை மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திராயான் – 2 இருக்கும் லேண்டர் சரியாக தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியானஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் சந்திரயான்-3 திட்டத்தை சுமார் ரூ.615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது.
இந்த முறை எந்த தொழில்நுட்பக் கோளாறும் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதற்காக ஏற்கனவே இரண்டு முறை சோதனை ஓட்டம் செய்யப்பட்டுள்ளது.
சந்திரயான்-3 சோதனை ஓட்டம்
இந்தியாவின் நிலவு பயணத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் சந்திரயான்-3 முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை செயல்படுத்தப்பட்டது.
EMI-EMC சோதனையானது, விண்வெளி சூழலில் செயற்கைக்கோள் துணை அமைப்புகளின் செயல்பாடு மற்றும் எதிர்பார்க்கப்படும் மின்காந்த நிலைகளுடன் அவற்றின் இணக்கத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. இந்தச் சோதனையானது செயற்கைக்கோள்களை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல் என்று இஸ்ரோ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
3 முக்கியப் பகுதிகள்
சந்திரயான்-3 இன்டர்பிளானட்டரி மிஷன் மூன்று முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது: propulsion, லேண்டர் மற்றும் ரோவர். அதாவது புரபுல்சன் பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ தொலைவுக்கு கொண்டு செல்லும். லேண்டர் பகுதி நிலவில் தரையிறங்கும் பகுதியாகும், ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ- அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் -3 ஏவுகணையின் பொருத்தப்பட உள்ள சி.இ.20 க்ரையோஜெனிக் எஞ்சினின் சோதனை அதாவது இரண்டாம் கட்ட சோதனை வெற்றிகரமாக பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. மகேந்திரகிரியின் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இச்சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணில் பாயும் சந்திராயான் 3:
சந்திரயான்-3 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் வரும் ஜூலை 12-ம் தேதி ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் 42 நாட்கள் பயணத்துக்கு பின்னர் லேண்டர் ஆகஸ்ட் 22-ம் தேதி விண்ணில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. சந்திரயான் - 3 திட்டம் வெற்றி பெற்றால் நிலவை பற்றிய பல்வேறு ரகசியங்கள் தெரிய வரும் என நம்பப்படுகிறது.