ரஜினிகாந்தை ரோஜா உள்ளிட்டோர் விமர்சித்ததற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 


சந்திரபாபு நாயுடுவின் தொலைநோக்குப் பார்வையால் நியூயார்க் போல் ஐதராபாத் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்திருந்தார்.  இதனை ஆந்திர அமைச்சரும் நடிகையுமான ரோஜா, எம்.எல்.ஏக்கள் கோடாலி நானி., மதுசூதன ரெட்டி உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர்.


இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மீது ரஜினிகாந்த் எந்த குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.  தேவையில்லாத விமர்சனங்களை தெலுங்கு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும், அவர்களை மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். வாய் கொழுப்பு எடுத்து பேசும் தனது கட்சி தலைவர்களை ஜெகன்மோகன் ரெட்டி கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 


அண்மையில் புதுச்சேரி திருக்காஞ்சி புஷ்கரணி விழாவில் நடக்கும் கங்கா ஆர்த்தி நிகழ்ச்சியில், ஆந்திரா சுற்றுலா அமைச்சரும்  நடிகையுமான ரோஜா பங்கேற்றிருந்தார். இந்நிகழ்வில் புதுச்சேரி சட்டபேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் ஜெயகுமார், சந்திரபிரியங்கா  ஆகியோரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, ரஜினி அரசியல் வேண்டாம் என முடிவு செய்த பின்னர் என்.டி.ஆர் விழாவில் சந்திரபாபு நாயுடு குறித்து தெரியாமல் பேசி உள்ளார். ஆந்திராவில் உள்ளவர்கள் ரஜினியை சூப்பர் ஸ்டாராகவும், நல்ல நடிகராகவும் நினைத்தனர். மேல் லோகத்தில் இருந்து சந்திரபாபுவுக்கு, என்.டிமார் ஆசீர்வாதம் செய்வார் என ரஜினி பேசியது குறித்து  என்.டி.ஆர் ரசிகர்கள் கோபமாக உள்ளதாக தெரிவித்தார்.


”ஆந்திர அரசியல் தெரியாமல் சந்திரபாபு நாயுடு கொடுத்த ஸ்கிரிப்டை படிப்பது சரியானதாக இருக்காது, ரஜினி பேசிய விவகாரத்தில் இன்று ஜீரோ ஆனது கஷ்டமாக உள்ளது. தான் உண்டு, வேலை உண்டு என்று இருக்க வேண்டும். சந்திரபாபு நாயுடு குறித்து ரஜினி பேசியது தொடர்பாக அறிக்கை கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்றார்.  ஆந்திராவில் 2024-ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பெரும்பான்மையுடன் மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெறுவார் என ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா கூறினார்.