கர்நாடகாவில் ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. கர்நாடகாவில் வரும் 10-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், கர்நாடகாவில் பாஜக வென்றால், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, யுகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகளுக்கு, இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஏழை குடும்பங்களுக்கு தினந்தோறும் அரை லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும்


மாதந்தோறும் ஐந்து கிலோ ரேஷன் பருப்பு ஆகியவை ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்


வீடு இல்லாத 10 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைகள் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும்


பட்டியல், பழங்குடி குடும்ப பெண்கள் வங்கியில்  ரூ.10000 வைப்புத் தொகை செலுத்தினால், கூடுதலாக 10 ஆயிரம் தரப்படும்.


வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் 30 லட்சம் பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். 


வயதானவர்களுக்கு ஆண்டு தோறும் இலவசமாக முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும்


விவசாயிகள் 50 கிலோ வரையிலான விலை பொருட்களை இலவசமாக அரசு பேருந்துகளில் கொண்டு செல்ல அனுமதி


சூரிய சக்தி பம்பு செட் அமைக்க விவசாயிகளுக்கு 80% மானியம் வழங்கப்படும். உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.


UCC நடைமுறைப்படுத்தப்படும்


கர்நாடகாவில் NRC அறிமுகப்படுத்தப்படும்


பாஜக- காங்கிரஸ் போட்டி


கர்நாடகா சட்டமன்றத்துக்கு மே 10-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கு சில நாள்களே இருக்கும் நிலையில், அங்கு பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிரப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். 


பாகல்கோட்டை என்ற இடத்தில் பா.ஜ.க-வின் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்தால், வளர்ச்சி பின்னோக்கிப் போய்விடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குடும்ப அரசியல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்கும். அதிகளவில் ஊழல் நடைபெறும். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், கர்நாடகாவில் வன்முறைகள் வெடிக்கும் என்றார் அமித் ஷா.


காங்கிரஸ் வெற்றிபெற்றால், கர்நாடகாவில் கலவரங்கள் வெடிக்கும் என்று அமித் ஷா பேசியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், பெங்களூருவிலுள்ள ஹைகிரவுண்டு காவல் நிலையத்தில் அமித் ஷா குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் புகாரளித்தனர்.


இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், “ஒரு சாதாரண மனிதர் இப்படிப் பேசியிருந்தால், தற்போது அவர் கைதுசெய்யப்பட்டிருப்பார். ‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரங்கள் நடக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் பேசியிருக்கிறார். அவர் அவ்வாறு பேசக் கூடாது. அவர் ஒன்றும் பா.ஜ.க-வின் நட்சத்திரப் பேச்சாளர் அல்ல. இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடமும் புகாரளித்திருக்கிறது” என்று கூறினார்.