ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு முறைப்படி இன்று பொறுப்பேற்றார். தேர்தல் வாக்குறுதிகளின்படி, 5 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார். குறிப்பாக, மீண்டும் அண்ணா உணவகம் அமல், நில உரிமைச்சட்டம் ரத்து, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் திறன் கணக்கீட்டுத் திட்டம், முதியோர்கள், விதவைகள் மற்றும் தகுதியானோருக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட கோப்புகளில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்டார்.


தேர்தல் பிரச்சாரத்தின்போது, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம், ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள், பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம், ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுதோறும் 20 ஆயிரம் ரூபாய் மானியம், மாவட்ட மத்திய கூட்டறவு வங்கியில் இறுதித் தவணை அளிக்கப்படும் ஆகிய முழக்கங்களைத் தேர்தல் வாக்குறுதிகளாக முன்வைத்து இருந்தார்.






ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவைக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மே மாதம் 13-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது. பவன் கல்யாணின் ஜனசேனா 21 இடங்களிலும் பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 11 இடங்களை மட்டுமே பெற்றது.


மீண்டும் அண்ணா உணவகம் அமல்


தொடர்ந்து, ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு நேற்று பதவி ஏற்றார். துணை முதல்வராக பவன் கல்யாண் பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 


அதையடுத்து முறைப்படி சந்திரபாபு நாயுடு இன்று பொறுப்பேற்றார். தேர்தல் வாக்குறுதிகளின்படி, 5 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார். மீண்டும் அண்ணா உணவகம் அமல், முந்தைய ஆட்சியில் கொண்டு வந்த நில உரிமைச்சட்டம் ரத்து, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் திறன் கணக்கீட்டுத் திட்டம், முதியோர்கள், விதவைகள் மற்றும் தகுதியானோருக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட கோப்புகளில் முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று கையெழுத்திட்டார்.


முன்னதாக, 2019 சட்டப்பேரவைத் தேர்தலில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சட்டமன்றத்தில் 151 இடங்களையும், மக்களவைத் தொகுதிகளில் 22 இடங்களையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.