வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் சந்திராயன் -3 திட்ட செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ இணை இயக்குனர் எஸ்.வி.சர்மா தெரிவித்துள்ளார். 


முன்னதாக இந்தியாவின் நிலவு பயணத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், பெங்களூருவில் உள்ள யுஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் சந்திரயான்-3 சோதனை ஓட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.  இந்த சோதனை ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை நடத்தப்பட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்தது.


EMI-EMC சோதனை, விண்வெளி சூழலில் செயற்கைக்கோள் துணை அமைப்புகளின் செயல்பாடு மற்றும் எதிர்பார்க்கப்படும் மின்காந்த நிலைகளுடன் அவற்றின் இணக்கத்தன்மையை உறுதிப்படுத்த நடத்தப்படுகிறது. இந்தச் சோதனை செயற்கைக்கோள்களை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல் என்று இஸ்ரோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 இன்டர்பிளானட்டரி மிஷன் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது: propulsion, லேண்டர் மற்றும் ரோவர். புரபுல்சன் பகுதி, லேண்டர் பகுதி, ரோவர் பகுதியாகும். அதாவது புரபுல்சன்பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ பகுதிக்கு கொண்டு செல்லும். லேண்டர் பகுதி நிலவில் தரையிறங்கும் பகுதி. ரோவர் பகுதி, நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ- அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டுள்ளது.


நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பும் ஆள் இல்லா விண்கலம் சந்திரயான். சந்திரயான்-1 கடந்த 2008-ஆம் ஆண்டு அனுப்பிய நிலையில், சந்திரயான்-2 விண்கலம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி ஜிஎஸ்எல்பி மாக்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் சந்திரயான்-2 சென்றது. சாஃப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்க முயன்றபோது, தொழில்நுட்ப கோளாறால் விண்கலம் சந்திரனின் தரைப்பகுதியில் விழுந்தது. இதனால், சந்திரயான்-2 விண்கலத்தில் இருக்கும் ரோவர் உள்ளிட்ட பல்வேறு கருவிகளால் செயல்படமுடியவில்லை. இந்நிலையில் சந்திரயான் 2 மிஷன் தோல்வியடைந்தது என அறிவிக்கப்பட்டது.


இதனால் சந்திரயான் 3 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான் emi/emc சோதனை மேற்கொள்ளப்பட்டது. விண்கலம் தரையிறங்கி முழுமையாக செயல்படுத்த முக்கியமாக கருத்தப்படுவது இந்த emi/emc தான். இந்த சோதனை திருப்திகரமாக உள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


சந்திரனின் அமைப்புகள் மற்றும் பல அம்சங்களை நன்கு புரிந்துகொள்வதை சந்திரயான் 3-ன் முக்கிய பணி ஆகும். சந்திரனின் மேற்பரப்பில் பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கத்தை நிரூபித்தல் (soft landing), சந்திரனில் ரோவரின் ரோவிங் திறன்களை நிரூபித்தல் மற்றும் தரையிறங்கும் இடத்திலேயே அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளுதல் ஆகியவை  இதன் முக்கிய பணி என்பது குறிப்பித்தக்கது.