சமீப நாட்களாக பாலங்கள் இடிந்து விழுகிறது தொடர்பான செய்திகளில் இடம்பிடித்துள்ளது பீகார் மாநிலம்.
15 நாட்களில் 7 பாலங்கள்:
கடந்த சில தினங்களாக, பீகாரில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு மத்தியில், பீகார் சிவான் மாவட்டத்தில் உள்ள ஒரு பாலம் இன்று இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, பீகாரில் கடந்த 15 நாட்களுக்குள் பாலம் இடிந்து விழுவது ஏழாவது சம்பவமாகும்.
சிவானின் தியோரியா தொகுதியில் அமைந்திருந்த இந்த சிறிய பாலம், பல கிராமங்களை இணைக்கிறது. கடந்த 11 நாட்களில், சிவனின் பகுதியில் பாலம் இடிந்து விழுவது, இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
கடந்த ஜூன் 22 ஆம் தேதி, தாரௌண்டா பகுதியில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் என்ன ?
இந்நிலையில், இன்று ( ஜூலை 3 ) பாலம் இடிந்து விழுந்தது குறித்து சரியான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக துணை வளர்ச்சி ஆணையர் முகேஷ் குமார் தெரிவித்தார். இச்சம்வத்தை தொடர்ந்து, மூத்த அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தியோரியா பிளாக்கில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்தது. இச்சம்பவம் அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, பாலம் 1982-83ல் கட்டப்பட்டது. பிடிஐ செய்தி முகமை தெரிவித்ததாவது, கடந்த சில நாட்களாக பாலத்தில் பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்த கனமழையால், கண்டகி ஆற்றில் கடும் வெள்ளம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக பாலத்தின் கட்டமைப்பு வலுவிழந்து, இடிந்து விழுந்திருக்கலாம் என கிராம மக்கள் கருத்து தெரிவித்தனர்.
தாக்குர்கஞ்ச் பாலம்:
ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னதாக, கனமழையைத் தொடர்ந்து, பண்ட் ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்ததால் தாக்குர்கஞ்ச் தொகுதியில் உள்ள ஒரு பாலம் இடிந்து விழுந்தது. பதரியா பஞ்சாயத்தின் கோஷி டாங்கி கிராமத்தில் அமைந்துள்ள இந்த பாலம், 2007-2008 ஆம் ஆண்டு அப்போதைய தாகூர்கஞ்ச் எம்பி பட்ஜெட் நிதியில் கட்டப்பட்டது. என தகவல் தெரிவிக்கின்றன
மதுபானி பாலம்:
ஜூன் 28 அன்று, பூதாஹி ஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் மதுபானியில் இடிந்து விழுந்தது. பீகார் அரசின் ஊரகப் பணிகள் துறையின் திட்டமான மதுபானி பாலம், 2021 முதல் கட்டப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் 15 நாட்களில் 7 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுவது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வருவது பெரும் பேசு பொருளாகி உள்ளது.