தமிழகம் உள்ளிட்ட 25 மாநில ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, ரூ.8,923.8 கோடி அடிப்படை மானியத்தை (Basic Untied Grants) நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை விடுவித்துள்ளது. 2021-22 நிதியாண்டில் விடுவிக்கப்பட்ட அடிப்படை மானியத்தின் முதல் தவணைத் தொகை இதுவாகும். இதில், தமிழகத்திற்கு ரூ.533. 2 கோடி அடிப்படை மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரு நிதியாண்டின் அடிப்படை மானியத்தின் முதல் தவனை ஜூன் மாதத்தில் விடுவிக்கப்படும். ஆனால், தற்போது கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக முன்கூட்டியே இந்த தவணைத் தொகை விடுவிக்கப்பட்டதாக நிதி அமைச்சகம் தெரிவித்தது. ஊரக உள்ளாட்சி அமைப்புகள் கோவிட்- 19 நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுக்கு இந்த தொகையை பயன்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடும் ஊரக அமைப்புகளின் அமைப்புகளின் அனைத்து அடுக்குகளின் கரங்களையும் இந்த மானியத் தொகை பலப்படுத்தும்.
மேலும், அந்தந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகள் அடிப்படை மானியத்தை பெறுவதற்குத் தேவையான 15-வது நிதி ஆணைய மானியம் பரிந்துரைத்த சில நிபந்தனைகளையும் மத்திய அரசு தற்போது தள்ளுபடி செய்துள்ளது.
அடிப்படை தொகை என்றால் என்ன?
நிதிஆணைய மானியத்தின் பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத்தில் 50 சதவீதம் அடிப்படை மானியமாகவும் (Basic Untied Grants ) மற்றும் 50 சதவீதம் இணைப்பு மானியமாகவும் வழங்குகிறது (tied grants) உள்ளாட்சி அமைப்புகள் சம்பளம் மற்றும் இதர நிறுவனச் செலவுகள் தவிர குறிப்பிட்ட இடங்களில் செய்யவேண்டிய தேவைகளுக்கு அடிப்படை மானியத்தைப் பயன்படுத்தலாம்.
இணைப்பு மானியத்தை (a) துப்புரவு மற்றும் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாமல் ஆக்குவதற்கான பராமரிப்பு (b) குடிநீர் விநியோகம், மழைநீர் சேமிப்பு, தண்ணீர் சுத்திகரிப்பு போன்றவற்றுக்குப் பயன்படுத்த முடியும். இணைப்பு மானியத்தின் ஒரு பாதியை, இந்த இரண்டு முக்கியமான சேவைகளுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகள் முடிந்த அளவுக்குப் பயன்படுத்தலாம். ஆனாலும், ஒரு பிரிவின் தேவை முழுவதும் நிறைவேறினால், இதர பிரிவுகளுக்கு அந்த நிதியை ஊராட்சி அமைப்புகள் பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்தது.