இந்தியாவில் தன்பாலீர்ப்பு திருமணங்களை சட்டபூர்வமாக்குவதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் மீதான விசாரணையை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் எனக் கோரிய மனுவை எதிர்த்துள்ள மத்திய அரசு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த மனு என்பது நீதிமன்ற விசாரணை பற்றி நாடக பாணியிலான தோற்றத்தை உருவாக்கி, மக்களின் இரக்கத்தைப் பெறும் நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது. 


மேலும், இந்த வழக்கில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகவோ, தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகவோ எந்த விவகாரமும் இல்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. `இந்திய மக்கள்தொகையின் பெரும்பாலானோர் இந்த வழக்கினால் பாதிக்கப்படவில்லை. இந்த மனுதாரர் தேவையில்லாமல் விளம்பரம் தேடும் தவறான நோக்கத்தோடு மனுத் தாக்கல் செய்துள்ளார்’ என்றும் மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 


கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் போது, டெல்லி உயர் நீதிமன்றம் இந்தியாவில் தன்பாலீர்ப்பு திருமணங்களை சட்டபூர்வமாக்குவதற்காக மனுக்களின் மீதான விசாரணையில் நேரலை ஒளிபரப்பு குறித்து மத்திர அரசிடம் கருத்து கேட்டிருந்தது. மேலும், இந்து திருமணச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம், வெளிநாட்டுத் திருமணச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தன்பாலீர்ப்புத் திருமணங்களைச் சட்டபூர்வமாக்கக் கோரி இதுவரை சுமார் 8 மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. மேலும், ஒரு நபரின் பாலினம், பாலின நோக்குநிலை ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளாமல் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளான 14,15,19,21 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் தன்பாலீர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அடிப்படை உரிமையாகவும் அறிவிக்க வேண்டும் எனவும் இந்த மனுக்களில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 


மனுதாரர்களின் சார்பாக வாதாடும் மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவும், இந்த விவகாரம் இந்திய மக்கள்தொகையில் சுமார் 7 முதல் 8 சதவிகிதம் பேர் வரை பாதிக்கும் ஒன்று எனவும், அதனால் நேரலை ஒளிபரப்புக்கு அனுமதி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 


தன்பாலீர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதைச் சட்டபூர்வமாக்க வேண்டும் என விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை மனுக்களைக் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் போது தள்ளுபடி செய்யக் கோரியது மத்திய அரசு. இதற்குக் காரணமாக, `இந்தியாவில் திருமணம் என்பது காலம் காலமாக பின்பற்றப்படும் பழக்க வழக்கங்கள், சடங்குகள், பண்பாட்டு நடைமுறைகள், கலாச்சார நெறிமுறைகள், சமூக மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிகழ்கின்றன’ என்று சுட்டிக் காட்டியுள்ளது. மேலும், வெவ்வேறு பாலினங்களைச் சேர்ந்தோர் மேற்கொள்ளும் திருமணங்களை மட்டுமே சட்டபூர்வமாக்குவது என்பது சட்டப்பூர்வமான அரசு நலன் தொடர்புடையது என்றும் மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதாடியது குறிப்பிடத்தக்கது.