கடந்தாண்டு மார்ச் 30ம் தேதி அறிவிக்கப்பட்ட கோவிட் - 19 தொடர்பான பொறுப்புகளில் பணியாற்றி வரும் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீடு திட்டத்தை நீட்டிக்க திட்டமில்லை என்று மத்திய அரசு அறிவித்தது. 


கடந்தாண்டு இந்த திட்டத்தை அறிவித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், " மொத்தம் 22.12 லட்சம் பொது சுகாதார சேவையாளர்களுக்கு 90 நாட்களுக்கு ரூ.50 லட்சத்துக்கு இது காப்பீடு அளிக்கும். இதில் சமுதாய சுகாதாரப் பணியாளர்களும் அடங்குவார்கள்" என்று தெரிவித்தார்.  இதனையடுத்து இத்திட்டம் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டது.   


 



சுகாதாரப் பணியாளர்கள்


 


நாடு முழுவதும் கொரோனா நோய்த தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,61,500 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர, தற்போது 18,01,316 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  


சுகாதாரப்  பணியாளர்களுக்கான ரூ.50 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடு திட்டம் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.    


இத்திட்டத்தின் கீழ், கோவிட்-19 பாதித்த நோயாளிளுடன் நேரடியான தொடர்பில் ஈடுபட்டு சிகிச்சை அளிப்பதன் மூலம் நோய் பரவும் ஆபத்து வாய்ப்பில் இருக்கும் இந்த சுகாதாரப் பணியாளர்களுக்கு காப்பீடு வசதி அளிக்கப்படுகிறது. 


 



 


மேலும், கோவிட் - 19 தொடர்பான பொறுப்புகளில் பணியாற்ற அழைக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனை அலுவலர்கள்/ ஓய்வுபெற்ற / தன்னார்வலர்கள் / உள்ளாட்சி அமைப்புகள் / ஒப்பந்த / தினசரி கூலி அடிப்படையிலான / தற்காலிக / அயல்பணி அடிப்படையில் மாநில / மத்திய அரசு மருத்துவமனைகளில்  பணிபுரியும் அனைவரும் இதில் சேர்க்கப்பட்டனர். 


பயனாளி வேறு எந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறுபவராக இருந்தாலும், அதற்கும் கூடுதலாக, இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 


இந்நிலையில் கடந்த மாதம் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் மாநில/யூனியன் பிரதேச அரசுகளுக்கு  அனுப்பிய சுற்றறிக்கையில் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம்  மார்ச் 24 அன்று முடிவடைந்தது என்று தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் 287 பேருக்கு இந்த காப்பீடு திட்டத்தில் பணப் பலன் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.   


மேலும், " 2021 மார்ச் 24 நள்ளிரவு வரை சமர்பிக்கப்பட்ட  அனைத்து உரிமை கோரல்களும் இத்திட்டத்தின் கீழ் பணப் பலன் பெற தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள். உரிமைக் கோரல்கள் தொடப்ரான அனைத்து ஆவணங்களையும் காப்பீட்டு நிறுவனத்திற்கு சமர்பிக்க ஒரு மாதகால அவகாசம் அளிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.  


மத்திய அரசின் இந்த போக்கு சுகாதாரப் பணியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை படுதீவிரமாக உள்ளது.  கடந்த சில நாட்களாக அன்றாட பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு அதன் உணர்வற்ற நிலையை காட்டுவதாக உள்ளதென மருத்துவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.    


இதுவரை, கோவிட் - 19 தொடர்பான பொறுப்புகளில் பணியாற்றி வந்த முன்கள சுகாதாரப் பணியாளர்கள் இறப்பு எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளை மத்திய அரசு வெளியிடவில்லை. 287 பேர் மட்டுமே இந்த காப்பீடு திட்டத்தில் பணப் பலன் பெற்றுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. 


739 எம்பிபிஎஸ் மருத்துவர்கள் கொரோனா தொடர்புடைய பணிகளால் மரணம் அடைந்ததாக இந்திய மருத்துவர்கள் சங்கம் முன்னதாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தது.