அதானி குழுமத்தின் தலைவரான கௌவுதம் அதானி இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருப்பதோடு ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராகவும் இருக்கிறார்.
அண்மையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் பெரும்பாலும் மளமளவென உயர்ந்ததால் உலகின் 4ஆவது பெரிய பணக்காரராக கௌவுதம் அதானி தற்போது உள்ளார். இந்நிலையில், புலனாய்வு துறை (Intelligence Bureau) அளித்த சீக்ரெட் ரிப்போர்ட் அடிப்படையில் கௌதம் அதானிக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், கௌதம் அதானிக்கு உயர்மட்ட பாதுகாப்பு தேவை என புலனாய்வு துறை சமர்ப்பித்திருந்த சீக்ரெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, மத்திய அரசால் வழங்கப்படும் உச்சபட்ச பாதுகாப்பான Z பிரிவு பாதுகாப்பை கௌதம் அதானிக்கு வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கௌதம் அதானிக்கு 30 ராணுவ வீரர்கள் அடங்கிய Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும். இருப்பினும், 30 ராணுவ வீரர்கள் அடங்கிய இந்த Z பிரிவு பாதுகாப்பிற்கான முழு செலவையும் கௌதம் அதானியே ஏற்றுக்கொள்வார்.
இதற்கு முன் ஏற்கெனவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானிக்கும், அவரது மனைவி நிடா அம்பானிக்கும் Z பிரிவு பாதுகாப்பு இந்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. 30 ராணுவ வீரர்கள் அடங்கிய இந்த Z பிரிவு பாதுகாப்பிற்கான செலவுகளை அம்பானியே ஏற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி இரண்டாவது மிகப்பெரிய பணக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இசட் & இசட் ப்ளஸ்
மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் நாட்டின் உயரிய பாதுக்காப்புகளில், இசட் மற்றும் இசட் ப்ளஸ் பாதுகாப்பு முக்கியமானது. இதில் இசட் ப்ளஸ் என்பது மிகவும் உச்சபட்ச பாதுகாப்பு ஆகும். இந்தவகை இசட் ப்ளஸ் பாதுகாப்பானது, பிரதமர், உச்சநீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பிற்கு மிகுந்த அச்சுறுத்தல் உள்ளது என உளவுத்துறையால் உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கும்போது அரசியல் கட்சி தலைவர்களுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்.
இந்த இசட் ப்ளஸ் பாதுகாப்பில், 55 வீரர்கள் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் இருப்பார்கள். இதில், பத்துக்கும் மேற்பட்ட NSG வீரர்கள் இருப்பார்கள். ஒரு தலைவர் அல்லது அதிகாரி ஒருவர் பிளாக் கேட்ஸ் எனப்படும் கருப்பு பூனைப்படைகளின் பாதுகாப்பு வளையத்திற்குள் வலம் வந்தால் அவர் இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதே போல் இசட் பிரிவில் 22 வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். குறிப்பாக நான்கு முதல் ஐந்து NSG வீரர்கள் இருப்பார்கள். இசட் மற்றும் இசட் ப்ளஸ் பிரிவுகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு அதிநவீன துப்பாக்கியும் நவீன தகவல் தொடர்பு சாதனங்களும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டிருக்கும். மற்ற பாதுகாப்பு வீரர்களான Y, X, ஆகிய பாதுகாப்பு பிரிவு வீரர்களைக் காட்டிலும் இசட் மற்றும் இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் பாதுகாப்பு பணியாற்றும் வீரர்கள் மிகவும் திறமை படைத்த வீரர்களாக செயல்படுவார்கள். இக்கட்டான சூழலில் பாதுகாப்பு ஆயுதங்களே இல்லாமல் கூட எதிரிகளைச் சமாளிக்கும் வல்லமை படைத்தவர்களாக இந்த இரு பிரிவு வீரர்கள் மிகவும் திறமையாக செயல்படுவார்கள். மிகவும் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு தயார் படுத்தப்பட்ட வீரர்கள் என்பதால் தான் இவர்கள் இசட் மற்றும் இசட் ப்ளஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்