புதுடெல்லி: போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 2022ம் ஆண்டில் நாடு முழுவதும் ரூ.7 ஆயிரத்து 563 கோடியே 60 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக இந்தப் பதிலை அளித்துள்ளார். இதற்காக 4.21 கோடி அபராத ரசீதுகள் வழங்கப்பட்டதாகவும் அதன் மூலம் அபராதத் தொகை ரூ.7,563.60 கோடி விதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 


இருப்பினும் இதன் வாயிலாக ரூ.2 ஆயிரத்து 874 கோடியே 41 லட்சம் வசூலிக்கப்பட்டு விட்டதாகவும், இன்னும் ரூ.4 ஆயிரத்து 654 கோடியே 26 லட்சம் வசூல் செய்யப்பட வேண்டியுள்ளதாகவும் அந்த எழுத்துப்பூர்வ விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கட்கரி, 2023 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நாளில் 6.11 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் அதிகபட்சமாக (87,48,963) வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக உத்தரப்பிரதேசத்தில் (74,91,584) வாகனங்களும் டெல்லியில் (57,85,609) வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


மோட்டார் வாகனச் சட்டம்:


இந்தியாவில் 1939-ல் மோட்டார் வாகனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பின்னர் 1988-ல்தான் மோட்டார் வாகனச் சட்டம் முதன்முறையாக மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டது.  மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா 2017-ம் ஆண்டு மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு, நிலைக்குழு அளித்த சில பரிந்துரைகளுடன் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நீண்ட இழுபறிக்குப் பின்னரே அது நிறைவேற்றப்பட்டது.


புதிய மசோதாவில் 60-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 20 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. சாலைப் போக்குவரத்து விதிமுறைகளைப் புதுப்பித்தல், சாலை பாதுகாப்பை பராமரித்தல், ஊழலை ஒழித்தல், சிறந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தல் ஆகியவற்றுக்காக இந்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.


புதிய போக்குவரத்து சட்டம்:


புதிய போக்குவரத்து சட்டம்படி, உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டினால் முன்பு 500 ரூபாயாக இருந்த அபாரதத் தொகை தற்போது 5000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கைப்பேசியில் பேசிக்கொண்டே மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டினால் தற்போது 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதே விதிமீறலை செய்து இரண்டாவது முறை பிடிபட்டால் இனி 10000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது


கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் ஓட்டினால், அவர்களுடைய பெற்றோர்களுக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் வாகனங்களுக்கான பதிவு ரத்து செய்யப்படுவதோடு, இந்தக் குற்றத்துக்காக 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் 25000 வரை அபராதமும் விதிக்கப்படுகிறது.


அபராதம்:


மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் முன்பு விதிக்கப்பட்ட 10000 அபராதம் அப்படியே தொடர்கிறது.  மேலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், சாலைகளில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதும், “வீலிங்” எனப்படும் அபாயகரமான சாகசத்தில் ஈடுபட்டால் 500 ரூபாயாக இருந்த அபராதம் 5000ரூபாயாகவும், அதே விதிமீறலில் 2வது முறை பிடிபட்டால் 10000 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படுகிறது  


கார் ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால் 1000 அபராதம் வசூலிக்கப்படுகிறது வாகனங்களுக்கு காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் 2000 அபராதம் வசூலிக்கப்படுகிறது  பதிவு இல்லாத வாகனங்களை ஓட்டினால் 2500 அபராதம். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர கால வாகனங்களுக்கு வழிவிடாமல் இருந்தால் 10000 அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.