கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. கடந்த சில மாதங்களாக இதன் தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அது மீண்டும் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.


தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா:


அதேபோல, பருவகால காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பல்வேறு மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையுடன் இருக்கும்படி பல்வேறு மாநிலங்களில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 


இதற்கிடையே, இந்த வாரம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் கொரோனா ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதில், சுகாதார உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நாளை மற்றும் நாளை மறுநாள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயிற்சி ஒத்திகை நடத்தப்பட உள்ளது.


ஒத்திகையில் சுகாதார மையங்களில் போதுமான படுக்கைகள் இருக்கிறதா?  நிலைமையை எதிர்கொள்ள தேவையான மனித வளம் இருக்கிறதா? ஆக்ஸிஜனை சப்ளை செய்வதற்கான தளவாடங்கள் இருக்கின்றனவா? ஆகியவை கவனத்தில் கொள்ளப்படும். 


இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், "இந்த ஒத்திகையில் அரசு மற்றும் தனியார் சுகாதார மையங்கள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


கடந்த பல வாரங்களாகவே, சில மாநிலங்களில் கொரோனா சோதனை குறைவாக நடத்தப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த தரநிலைகளை ஒப்பிடும்போது தற்போதைய சோதனை அளவுகள் போதுமானதாக இல்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.


கொரோனாவின் தாக்கம் குறிப்பாக ஐந்து மாநிலங்களில் அதிகமாக காணப்படுகிறது. அது எந்தெந்த மாநிலம் என்பதை கீழே பார்க்கலாம்.


ஹரியானா:


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை ஹரியானா அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதேபோல, கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பொது மக்களை மாநில அரசு கேட்டு கொண்டுள்ளது.


கேரளா:


கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், பிற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசத்தை கட்டாயமாக அணிய வேண்டும் என கேரளாவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரி:


புதுச்சேரி நிர்வாகம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.


உத்தர பிரதேசம்:


அனைத்து விமான நிலையங்களிலும் சர்வதேச பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


டெல்லி:


டெல்லியில் உள்ள மருத்துவமனைகள், பாலிகிளினிக்குகள் மற்றும் மருந்தகங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறு சுகாதாரத் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.