தலைநகரில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யும் வகையில், மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் துணை நிலை அளுநருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் இரு தரப்புக்கும் இடையே பிரச்னை வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில், ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் நியமிக்கவும் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது; அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் உட்பட்டவர் என்றும் உச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு சாதகமாக அண்மையில் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு, அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அதன்படி, டெல்லி அரசில் அதிகாரிகளின் நியமனம், பணியிடமாற்றம் போன்ற விஷயங்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் துணை ஆளுநருக்கு வழங்கப்படுகிறது. இந்த அவசரச் சட்டம் மூலம் தேசிய தலைநகர் சேவை ஆணையம் (National Capital Service Authority) உருவாக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் தொடர்பான விவகாரங்களில் துணை நிலை ஆளுநருக்கு இந்த ஆணையமே பரிந்துரை வழங்கும். டெல்லி முதலமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோர், இந்த ஆணையத்தில் இடம்பெறுவர்.
அதிகாரத்தால் தீர்மானிக்கப்பட வேண்டிய அனைத்து விஷயங்களும், கலந்துகொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளால் தீர்மானிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநர், அவரிடம் செய்த பரிந்துரையில் மாறுபட்டு இருந்தால், பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய ஆணையத்திடம் திருப்பி அனுப்பவும், கருத்து வேறுபாடு ஏற்பட்டால், துணைநிலை ஆளுநரின் முடிவே இறுதியானது என்றும் அவசரச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மாநில அரசின் அதிகாரங்களை நிலைநாட்டிய நிலையில், இந்த அவசர சட்டத்தின்படி டெல்லி துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி சட்டசபை கீழ் வரும் விவகாரங்களில் முடுவெடுக்கும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.