நாடு முழுவதும் மருத்துவத்துக்கு பயன்படும் ஆக்சிஜன் தேவை அதிகரித்துவரும் நிலையில் அது போதி அளவு கையிருப்பில் உள்ளதாகவும், தேவைப்படும் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.


இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "நாட்டில் ஆக்ஸிஜனின் தினசரி  உற்பத்தி 7127 மெட்ரிக் டன்னாக உள்ளது. இது தவிர எஃகு ஆலைகளில் கிடைக்கும் கூடுதல் ஆக்ஸிஜன் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படுகிறது. ஆக்ஸிஜன் விநியோகம் அதிகரித்துள்ளதால்,  மத்தியக்குழு ஆணையின் படி கடந்த இரண்டு நாட்களாக ஆக்ஸிஜன் மொத்த உற்பத்தி 100 சதவீதமாக்கப்பட்டுள்ளது.


கடந்த 12-ஆம் தேதி அன்று, நாட்டில் மருத்துவ ஆக்ஸிஜனின் நுகர்வு 3842 மெட்ரிக் டன். இது தினசரி மொத்த உற்பத்தியில், 54 சதவீதம் மட்டுமே.  மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு,  ஆகிய மாநிலங்களில் ஆக்ஸிஜன் நுகர்வு மிக அதிகமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக சத்தீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் ஆக்ஸிஜன் நுகர்வு அதிகமாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது. 


கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா நோய்த்தொற்று சமயத்தில், மாநிலங்களுக்கு தேவையான மருத்துவ ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதிசெய்ய தொழில்துறை வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை செயலாளர் டாக்டர் குருபிரசாத் மொகபத்ரா தலைமையில், மூத்த அதிகாரிகள் அடங்கிய அமைச்சகங்களுக்கு இடையேயான, அதிகாரம் பெற்ற குழு-2 (inter-ministerial Empowered Group (EG2) ) அமைக்கப்பட்டது.


இந்தக் குழு கடந்த ஓராண்டாக மருத்துவ ஆக்ஸிஜன் சீராக கிடைப்பதை, தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், கொரோனா  அதிகரித்துள்ள சூழ்நிலையில், இந்தக் குழு மீண்டும் கூடி, பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு போதிய அளவில் மருத்துவ ஆக்ஸிஜன் கிடைக்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளில், தற்போது இருப்பு 50,000 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக உள்ளது.  அதோடு ஆக்ஸிஜன் ஆலைகளில் உற்பத்தியும்  அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஆக்ஸிஜன் இருப்பு தற்போது  போதிய அளவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.