பயங்கரவாத செயல்பாடுகளை முடக்கும் விதமாக 14 மொபைல் செயலிகளை முடக்கி மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பயங்கரவாத குழுக்கள், இந்த செயலிகளை பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்படும் ஆலோசனைகளை கொண்டு சேர்க்க இந்த செயலி பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்படும் ஆலோசனைகள்:


ஜம்மு காஷ்மீரில் தங்களின் பயங்கரவாத செயல்கதளை நிறைவேற்றுவதற்காக தங்களின் ஆதரவாளர்களுக்கும் களத்தில் இறங்கி வேலை செய்பவர்களுக்கும் எப்படி செயல்பட வேண்டும் என்ற ஆலோசனைகள் இந்த செயலி மூலம் வழங்கப்பட்டுள்ளது.


Crypviser, Enigma, Safeswiss, Wickrme, Mediafire, Briar, BChat, Nandbox, Conion, IMO, Element, Second Line, Zangi மற்றும் Threema ஆகிய செயலிகளை மத்திய அரசு முடக்கியுள்ளது.


இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள மற்றும் இந்திய சட்டங்களை பின்பற்றாத செயலிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவற்றை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இந்த செயலி தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 பிரிவு 69A இன் கீழ் முடக்கப்பட்டுள்ளது.


ஜம்மு காஷ்மீரில் சதி திட்டம்:


காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த செயலிகள் மூலம் பயங்கரவாதம் பரப்பப்படுவதாக புலனாய்வு அமைப்புகள், உயர் மட்ட மூத்த அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வ தகவல் வழங்கப்பட்டது. 


பயங்கரவாதிகள் ஒருவருக்கொருவர் எப்படி தொடர்பு கொள்கின்றனர் என்பதை புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து வந்தன. தகவல்தொடர்புகளை கண்காணிக்கும் போது, ​​குறிப்பிட்ட மொபைல் செயலிக்கு இந்தியாவில் பிரதிநிதிகள் யாரும் இல்லை என்பது தெரிய வந்தது. செயலியில் நடக்கும் செயல்பாடுகளைக் கண்காணிப்பது கடினம் என்றும் ஏஜென்சிகள் கண்டறிந்தன" என்றார்.


கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக 14 மொபைல் செயலிகள் முடக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் விடுக்கும் விதமாக உள்ளது, சீனாவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி செயலிகள், யூடியூப் சேனல்கள் சமீபத்தில் முடக்கப்பட்டது.

 

கடன் செயலிகள், சூதாட்ட செயலிகள்:

 

அதன் அடிப்படையில், 138 சூதாட்ட செயலிகளையும் 94 கடன் வழங்கும் செயலிகளையும் முடக்க மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாதகமான விஷயங்களைக் கொண்டிருப்பதால், தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டம் 69வது பிரிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பிட்ட இந்த நிறுவனங்கள் மற்றும் நபர்களால் இயக்கப்படும் மொபைல் செயலிகள் மூலம் சிறிய அளவிலான கடன்களைப் பெறும் மக்களை மிரட்டி பணம் பறித்து, அவர்களை துன்புறுத்துதல் போன்ற பல புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.