மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது. டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில், மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.


ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்:


இதுதொடர்பாக, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது, தற்போதைய கேபினட் செயலாளர் டி.வி.சோமநாதன் தலைமையில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக 100 ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது. ரிசர்வ் வங்கி, உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.


இந்த ஆய்வுக்கூட்டம், ஆலோசனைகளின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பென்சன் திட்டம் ( யு.பி.எஸ்.) அறிமுகம் செய்ய பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 23 லட்சம் மத்திய அரசு பணியாளர்கள் பயன் பெறுவார்கள்.


அடுத்தாண்டு முதல் அமல்:


இந்த திட்டத்தை மாநில அரசுகளும் செயல்படுத்தலாம். அதனால், 90 லட்சம் பேருக்கு பயன் கிடைக்கும். மேலும், இதைச் செயல்படுத்துவதால் மத்திய அரசுக்கு நிலுவைத் தொகையாக மட்டும் 800 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் முதல் ஆண்டில் மட்டும் ரூபாய் 6 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.


அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும். புதிய ஓய்வூதிய திட்டம் அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை மத்திய அரசு ஊழியர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.


இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


மேலும், கடந்த 2004ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வரும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து இந்த திட்டத்திற்கு மாற விரும்புபவர்களும் மாறிக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு பல மாநிலங்களும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசு தற்போது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க: பணி நேரத்திற்கு பிறகு நோ டிஸ்டர்பன்ஸ்.. தொழிலாளர்கள் உரிமைகளை பாதுகாக்க சூப்பர் சட்டம்.. செம்ம!