சேலம் ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளை மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் தீடிர் ஆய்வு மேற்கொண்டார்.‌ அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சேலம் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட பணிகள் குறித்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா அமைச்சரிடம் விளக்கினார். இதனையடுத்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட டிக்கெட் பரிசோதகர்களை சந்தித்து இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து, ஒரு ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் சேலம் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை மத்திய இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் பார்வையிட்டார். பொதுமக்களை கவரும் வகையில் ஜவுளிப் பொருட்களை அதிகளவில் காட்சிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.


பின்னர், மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் பேசுகையில், “ நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் 75 ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுத்து அதன் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. இதில் பயணிகளின் வசதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன. ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் சரக்கு ரயில் போக்குவரத்தும் மேம்படுத்தப்பட உள்ளது. இதேபோன்று தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்படும். தமிழகத்தில் தேவைப்படும் இடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


 


சேலம் ரயில் கோட்டத்தில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தியபிறகு புதிய ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ரயில்களின் வேகத்தையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தொழில் நகரம் மற்றும் ஜவுளி நகரமான சேலத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் பயன்பெறுவர். அசல் பட்டு சேலைகள், பருத்தி புடவைகள் இப்பகுதியில் அதிகளவில் தயாரிக்கப்படுவால் நெசவாளர்களுக்கு பயன் கிடைக்கும் வாய்ப்பும் உருவாகும். நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவிட் காலத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு ரயில் இயக்கப்பட்டதன் மூலம் விவசாயிகள் பயனடைந்தனர். இதேபோன்று பல்வேறு தரப்பினர் கோவிட் காலத்தில் இயக்கப்பட்ட ரயில் சேவையினால் பயனடைந்தனர். பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் சரக்கு முனையம் மேம்படுத்தப்பட்டுள்ளதால் சரக்கு ரயில் போக்குவரத்து நாடு முழுவதும் அதிகரித்துள்ளது” என்றார்.


 


காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ், ”நான் சூரத் நகரில் இருந்து வந்திருப்பதால் இதற்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டும். சூரத் நகரில் மோடி சமுதாயத்தினர் எண்ணற்றவர்கள் உள்ளனர். பிரதமரை இழிவு படுத்துவதாக நினைத்து ராகுல் காந்தி ஒரு பெரிய சமுதாயத்தினரையே இழிவு படுத்தி விட்டார். இது கண்டிக்கத்தக்கது. ஒரு சமுதாயத்தின் மீது ராகுல்காந்திக்கு ஏன் இவ்வளவு கோபம் இருக்கிறது எனத் தெரியவில்லை. அந்த சமுதாயத்தை திட்டியதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  2 ஆண்டு தண்டனை  வழங்கப்பட்டுள்ள ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டமே காரணமாகும். ராகுல் காந்தி தன்னுடைய  தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதற்கு இன்னும் ஒரு மாதம் கால அவகாசம் உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியினர் நீதிமன்றத்திற்கு சென்று இதைப்பற்றி பேசாமல் பாராளுமன்றத்தில் நிதி மசோதா தாக்கல் செய்யும் போது, அங்கு ராகுல்காந்தி பற்றி பேச வேண்டும் என அமளியில் ஈடுபடுகின்றனர். ராகுல்காந்தி பிரச்சினைக்கு பேச வேண்டிய இடம் நீதிமன்றம்தானே தவிர பாராளுமன்றம் இல்லை” என்று தெரிவித்தார்.