மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து இந்திக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாகவும் குறிப்பாக தென் மாநிலங்களில் இந்தி திணிக்கப்படுவதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.


அதற்கு ஏற்றார்போல், கேந்திரிய வித்யாலயாக்கள், ஐஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிற்று மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியானது.


குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு இதுகுறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையின் 11ஆவது தொகுதியில், ஆங்கிலம் மிகவும் அவசியமான இடங்களில் மட்டுமே பயிற்றுவிக்கும் மொழியாக இருக்க வேண்டும், ஆனால் கல்வி நிறுவனங்களில் படிப்படியாக ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை மாற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டதாக தகவல் வெளியானது.


இது, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். குறிப்பாக, தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு எழுந்தது.


இந்நிலையில், இந்த பிரச்சினை நேற்று தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டதொடரிலும் எதிரொலித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம் இது தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். 


இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை இந்தியில் நடத்தும் திட்டம் இல்லை என தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் பொதுவாக இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படுகிறது. 


இருப்பினும், மல்டி-டாஸ்கிங் [தொழில்நுட்பம் அல்லாத] பணியாளர் தேர்வின் இரண்டாம் தாள், அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் நடத்தப்படுகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வுகளை இந்தியில் மட்டும் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை.


யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்திலேயே மல்டி சாய்ஸ் அப்ஜெக்டிவ் டைப் கேள்விகள் கேட்கப்படுகிறது. அதேபோல, சிவில் சர்வீசஸ் (மெயின்ஸ்) தேர்வில், மொழி மற்றும் இலக்கியத் தாள்களைத் தவிர, பிராந்திய மொழியிலும் பதில்களை எழுத தேர்வர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.


பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள குரூப் பி பதவிகளுக்கும், அவற்றின் இணைக்கப்பட்ட அலுவலகங்களில் 10,500 ரூபாய் வரை ஊதியம் பெறும் பதவிகளுக்கும் =தொழில்நுட்பம் அல்லாத குரூப் சி பதவிகளுக்கும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமே தேர்வுகளை நடத்தி பணியமர்த்துகிறது.